அலோர் ஸ்டார், மே 9 – பினாங்கு மருத்துவமனையில் நேற்று கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கெடா மாநில முன்னாள் மந்திரி பெசாரான டத்தோஸ்ரீ அஸிஸான் அப்துல் ரசாக்கின் உடல்நிலை தேறி வருவதாக அவரது செய்தித் தொடர்பாளர் முகமட் ஹெல்மி காலிட் இன்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
“தற்போது அவரால் மெதுவாக பேச முடிகிறது அதோடு உணவும் உட்கொள்ள முடிகிறது. அவரை சந்திக்கும் பார்வையாளர்களை அடையாளம் காண முடிகிறது” என்று முகமட் ஹெல்மி காலிட் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
69 வயதான அஸிஸான் காலில் ஏற்பட்ட நோய் தொற்று காரணமாக நினைவிழந்த நிலையில் நேற்று பினாங்கு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பிறகு மாலை 4 மணியளவில் அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலில் சுங்கை லிமாவ் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட அஸிஸான், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தேசிய முன்னணி வேட்பாளர் முகமட் ஃபாசில்லா முகமட் அலி மற்றும் இரு சுயேட்சை வேட்பாளர்களை தோற்கடித்து, 13, 294 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.