Home 13வது பொதுத் தேர்தல் “பாஸ் தோல்விக்கு காரணம் குறைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லை” – தேர்தல் ஆய்வு மைய...

“பாஸ் தோல்விக்கு காரணம் குறைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லை” – தேர்தல் ஆய்வு மைய இயக்குனர் கருத்து

595
0
SHARE
Ad

0123takpasti

கோலாலம்பூர், மே 16 – பொதுத்தேர்தலில் கெடா மாநிலத்தில் தேசிய முன்னணியிடம் பாஸ் தோற்றதற்கு முக்கியக் காரணம், தன்னைப் பற்றிய குறைகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாததும், அம்மாநில மந்திரி பெசார் திறமையாகச் செயல்படாததும் தான் காரணம் என்று மலாய் பல்கலைக் கழகத்தின் ஜனநாயகம் மற்றும் தேர்தல் ஆய்வு மைய (UMCDEL) இயக்குனர் முகமட் ரிட்சுவான் ஒத்மான் கூறியுள்ளார்.

 “பாஸ் ஒரு வலுவான கட்சி என்று மீண்டும் மீண்டும் கூறிக்கொள்வதால் வெற்றியடைய முடியாது. கெடா மாநில பாஸ் கட்சி கிளாந்தான் பாஸ் போன்று செயல்படவில்லை. கிளந்தானில் 8 பேரிடம் கேட்டால் 4 பேர் பாஸை ஆதரிப்பார்கள், மூவர் தேசிய முன்னணியை ஆதரிப்பார்கள்.  ஆனால் 8 பேருமே முன்னாள் மந்திரி பெசாரான நிக் அப்துல் அஜீஸ் நிக் மாட்டுக்கு வாக்களிப்பதாகச் சொல்வார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“முன்னாள் கெடா மந்திரி பெசாரான அஸிஸான் அப்துல் ரசாக் மருத்துவமனையில் இருக்கிறார். அதனால் அது பற்றி விரிவாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் தேர்தல் முடிவு எப்படி இருந்ததென்று நம் அனைவருக்கும் தெரியும்” என்றும் முகமட் ரிட்சுவான் கூறியுள்ளார்.

மேலும், “சிலாங்கூர் மாநிலத்தில் பக்காத்தானின் வெற்றிக்கு அப்துல் காலிட் இப்ராகிம் முக்கியப் பங்காற்றினார். அம்மாநிலம் முழுவதும் 60 சதவிகிதம் மக்கள் செல்வாக்கு அவருக்கு இருந்தது. காலிட்டை ஆதரிப்பவர்கள் பெரும்பாலும் அரசு ஊழியர்களும், அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் ஆவர்” என்று குறிப்பிட்டார்.

கெடா மாநில பாஸ் கட்சி  தங்களுக்கு சாதகம் இல்லாத ஆய்வு முடிவுகளை ஏற்றுக்கொள்வதில்லை என்று பிடிவாதமாக இருந்தது என்றும், கெடா மாநிலத்தில் கடைசி வரை ஜசெகாவுக்கு இடம் கொடுக்கவில்லை என்றும் முகம்மட் ரிட்சுவான் கூறியுள்ளார்.