ஜோகூர் பாரு, மே 27 – ‘கறுப்பு 505’ பேரணி தொடர்பில் பக்காத்தான் தலைவர்கள் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஜோகூர் மாநில பிகேஆர் செயலாளர் ஆர். யோகேஸ்வரன், கடந்த மே 15 ஆம் தேதி புத்ரி வாங்சாவில் கறுப்பு 505 பேரணி நடத்தியது தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
பேரணி நடத்துவதற்கு 10 நாட்களுக்கு முன்னதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறி அவர் மீது அமைதிப்பேரணி பிரிவு 9(1) என்ற சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
யோகேஸ்வரனின் வழக்கறிஞர் ஜிம்மி புவா, ஹஸ்ஸான் அப்துல் கரிம் ஆகியோர் தனது கட்சிக்காரர் இதுவரை எந்த குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை என்பதால் அவருக்கு பிணை தேவையில்லை என்று நீதிமன்றத்தில் வாதாடினர்.
அவர்களது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி முகமட் ஜமீல் ஹுசைன், யோகேஸ்வரனை பிணையின்றி விடுவித்து வருகிற ஜூன் மாதம் 10 ஆம் தேதி இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார்.