கோத்தா கினபாலு, ஜூன் 4 – பிகேஆர் துணைத்தலைவர் நூருல் இஷா அன்வாருக்கு சபாவில் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதை அம்மாநில அரசு மறுத்துள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக சபா மாநில செயலாளர் சுகார்த்தி வாகிமான்(படம்) நேற்று வெளியிட்டுள்ள தனது அறிக்கையில், “நூருல் இஷா சபாவில் நுழைய எந்த ஒரு தடையும் இல்லை. கடந்த மே மாதம் 30 ஆம் தேதி ஒரே ஒரு முறை மட்டுமே பாதுகாப்புக் காரணங்களுக்காக சபாவில் நுழைய தடை விதிக்கப்பட்டது. இது நிரந்தரமான தடை அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங், பெர்சே இயக்கத்தின் இணைத் தலைவர் எஸ்.அம்பிகா மற்றும் பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி ஆகியோருக்கு சபாவில் நுழையத் தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்திகளையும் சுகார்த்தி மறுத்துள்ளார்.
“எதிர்கட்சித் தலைவர்களின் பாதுகாப்பிற்கு எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லாதவரை அவர்கள் சபாவில் நுழைய எந்த ஒரு நிரந்தரத் தடையும் விதிக்கப்படவில்லை. ஜசெக தலைவர் லிம் கிட் சியாங் கூட கடந்த இரண்டும் வாரத்திற்கு முன் சபாவில் நுழைய அனுமதிக்கப்பட்டார்” என்றும் சுகார்த்தி தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் 30 ஆம் தேதி பிகேஆர் கட்சியின் உதவித் தலைவரும், லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான நூருல் இசா அன்வார் சபா மாநிலத்திற்குள் நுழைவதற்கு குடிநுழைவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
“என்னைத் திருப்பி அனுப்ப குடி நுழைவுத் துறை அதிகாரிகளுக்கு சபா முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் கடைப்பிடிக்கப்படும் ஜனநாயகம் இதுதான். தேசிய முன்னணியே பொறுத்திருந்து பாருங்கள்!” என அன்று மாலை 7.30 மணியளவில் அனுப்பிய ட்விட்டர் குறுஞ்செய்தியில் நூருல் காட்டமாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.