கோலாலம்பூர், ஜூன் 4 – 13 ஆவது பொதுத்தேர்தலில் பல தொகுகளை எதிர்கட்சிகளிடம் இழந்த பிறகும், அம்னோ வெற்றி பெற்றதற்குக் காரணம், அம்னோவைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர மக்களுக்கு வேறு வழி இல்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தனது வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
“அம்னோவின் மீது பல மலாய்காரர்கள் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள். இருப்பினும் ஜசெக கூட்டணியுடன் களமிறங்கியிருக்கும் அன்வார் வெற்றிபெற்றுவிட்டால் என்னாவது என்ற பயத்தின் காரணமாகவே அவர்கள் வேறு வழியின்றி அம்னோவிற்கு வாக்களித்துள்ளனர்.
ஊழல் மற்றும் சுய நலத்திலிருந்து அம்னோ தன்னை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் அடுத்த தேர்தலில் மக்கள் வேறு கட்சியைத் தேடிப் போய்விடுவார்கள்” என்று மகாதீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் “அம்னோ நாட்டிற்காகவும், இனத்துக்காகவும், மொழிக்காகவும் போராடவில்லை. மாறாக குறிப்பிட்ட மக்கள் மற்றும் தனது உறுப்பினர்களுக்காக மட்டுமே போராடிவருகிறது. தங்களது இடத்தை நிலைநாட்டவும், தரத்திலும், உயர் பதவிகளிலும் தங்களை உயர்த்திக்கொள்ளவும், நிறைய சொத்துக்களை வாங்கி குவித்துக் கொள்வதற்காகவும் மட்டுமே அம்னோவில் உள்ளவர்கள் போராடுகிறார்கள்.
அதோடு கட்சியில் இணைய விரும்பும் திறமையுள்ள புதியவர்களுக்கு, அம்னோவின் மூத்த தலைவர்கள் வழிவிடுவதில்லை காரணம் புதியவர்கள் வந்தால் எங்கே தங்களது பங்கு குறைந்துவிடுமோ என்று அஞ்சுகிறார்கள்.
இதனால் நல்ல திறமை வாய்ந்தவர்கள் அனைவரும் எதிர்கட்சிகளில் சேர்ந்து திறமை குறைந்த உறுப்பினர்களே அம்னோவில் எஞ்சுகிறார்கள். இதுவே அம்னோவின் வீழ்ச்சிக்குக் காரணமாகிறது ” என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.