ஜபல்பூர், பிப்,4- சர்வதேச சந்தையில் ரூ.1 கோடி மதிப்புள்ள டைனோசர் முட்டை படிமம், மத்தியப் பிரேதேசத்தில் ரூ.500க்கு விற்பனை செய்யப்படுகிறது. மத்தியப் பிரதேச மாநிலத்தின் தார் மாவட்டத்தில் பட்ல்யா என்ற வனப்பகுதி உள்ளது. 89 ஹெக்டேர் பரப்பளவுள்ள இந்த வனப்பகுதியில் எந்த பாதுகாப்பும் இல்லை. இங்கு பல லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோ சர் முட்டை படிமங்கள் அதிகளவில் உள்ளன. சர்வதேச சந்தையில் டைனோசர் முட்டை படிமம் ரூ.1 கோடி வரை விலை போகிறது. இதனால் மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த கடத்தல் கும்பல் பட்ல்யா வனப் பகுதிக்கு வருகின்றனர். இங்குள்ள பழங்குடியின மக்களிடம் ரூ.500 கொடுத்தால் டைனோசர் முட்டையை காட்டில் தேடிப் பிடித்து கொண்டு வந்து தருகின்றனர். இது குறித்து மத்திப் பிரதேச வனத்துறை அமைச்சர் சர்தஜ் சிங் கூறுகையில், ‘‘பட்ல்யா வனப் பகுதியிலிருந்து டயனோசர் முட்டைகள் எவ்வளவு எடுத்துச் செல்லப்பட்டன என தெரிய வில்லை. இதைத் தடுக்க எந்த சட்டமும் இல்லாததால், டயோனசர் முட்டை படிமம் வியாபாரத்தை தடுக்க முடியவில்லை. இதனால் படிமம் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர மத்தியப் பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது’’ என்றார். இந்திய புவியியல் சர்வே அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டாக்டர் அருண் சோனாகியா கூறுகையில், ‘‘டைனோசர் படிமங்களை பாதுகாக்க குஜ ராத் போதிய நடவடிக்கை எடுத்துள்ளது. அதுபோல மத்தியப் பிரதேச அரசு எடுக்கவில்லை. சர்வதேச சந்தையில் ரூ.1 கோடிக்கு விலைபோகும் டைனோசர் முட்டை, இங்கு அடிமாட்டு விலைக்கு கடத்தல் கும்பல் வாங்கிச் செல்கிறது’’ என்றார்.