ஜூன் 7 – தனது தீவிரமான விரிவாக்கத் திட்டங்களின் காரணமாக அடுத்த ஆண்டு இறுதிக்குள் மாலிண்டோ ஏர் விமான சேவை நிறுவனம், 3 மில்லியனுக்கும் மேற்பட்ட பயணிகளை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2014ஆம் ஆண்டு இறுதிக்குள் திட்டமிட்டபடி இந்தியா, சீனா, மற்ற ஆசியான் நாடுகளுக்கு தனது பயணச் சேவைகளை நடத்தும் என அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி சந்திரன் ராமமூர்த்தி தெரிவித்தார்.
2014ஆம் ஆண்டு இறுதிக்குள் 20 முதல் 22 எண்ணிக்கை வரையிலான விமானங்கள் தீபகற்ப மலேசியாவின் நகரங்களுக்கான சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் அவர் பெர்னாமாவுக்கு வழங்கிய பேட்டியொன்றில் கூறினார்.
கடந்த மார்ச் மாத இறுதியில் தொடங்கிய மாலிண்டோ ஏர் சேவைகள் முதலில் கோத்தா கினபாலுவுக்கும் கூச்சிங் நகருக்கும் இடையில் தொடங்கியது. இதுவரை இந்த சேவையின் வழி 125,000 பயணிகள் பயன் பெற்றுள்ளனர்.
“3 மாதங்களுக்குள் இந்த எண்ணிக்கையை அடைந்திருப்பதை வைத்துப் பார்க்கும் போது, எங்களின் திட்டங்களின் படி எங்களின் பயண இலக்குகளை அடைய முடியும் என நம்புகின்றோம். தினசரி எங்களின் இணையப் பக்கத்தை சுமார் 50,000 பேர் தொடர்பு கொண்டு பார்க்கின்றார்கள். பயணச் சீட்டுகளையும் இணையத்தின் வழி வாங்குகின்றார்கள்” என சந்திரன் மேலும் கூறினார்.
மலிண்டோ ஏர் நிறுவனம், மலிவு விலை விமானக் கட்டணத்தையும், சாதாரண விமான சேவைக் கட்டணத்தையும் ஒருங்கே கொண்டிருக்கும்.
முதலில் உள்நாட்டு சேவைகளில் தங்களின் தரத்தை உயர்த்திக் கொண்டு, அதன் பின்னர் மற்ற அண்டை நாடுகளுக்கு தனது சேவையை ஏர் மலிண்டோ விரிவுபடுத்தும். முதல் கட்டமாக சிங்கப்பூர், சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு முதல் கட்டமாக சேவைகள் விரிவுபடுத்தப்படும்.
இந்த மாதத்தில் கிழக்கு மலேசியாவின் சிபு, மிரி, தாவாவ் ஆகிய நகரங்களுக்கு மலிண்டோ ஏர் தனது சேவையைத் தொடக்கவிருக்கின்றது.
ஆசியான் நாடுகளுக்கான தனது சேவைகளின் மூலம் மலேசியாவை ஒரு பொருத்தமான கடப்பு மையமாக (transit) தரம் உயர்த்த முடியும் என்றும் ஏர் மலிண்டோ நம்புகின்றது. தற்போது பேங்காக், சிங்கப்பூர் போன்ற நகரங்கள் மட்டுமே ஆசியான் பகுதியின் முக்கிய கடப்பு நகரங்களாக கருதப்படுகின்றன.
மலிண்டோ ஏர் சேவைகளின் விரிவாக்கத்தால் கோலாலம்பூரும் ஒரு முக்கிய கடப்பு நகராக உருவெடுக்கும்.
இந்த ஆண்டு இறுதிக்குள், கொச்சின், திருச்சி, புதுடில்லி போன்ற இந்திய நகரங்களுக்கும் மலிண்டோ ஏர் சேவைகளில் ஈடுபடும். ஷென்சென், ஷங்காய் போன்ற சீன நகரங்களுக்கும் மலிண்டோ ஏர் பயணச் சேவைகளைத் தொடங்கும்.
2014ஆம் ஆண்டில் இந்தியாவின் சென்னை, மும்பாய், கல்கத்தா போன்ற நகரங்களுக்கும் மலிண்டோ ஏர் தனது பயணச் சேவைகளை ஆரம்பிக்கும்.
மலிண்டோ ஏர், இந்தோனிசியாவின் லயன் ஏர் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். மலேசிய அரசாங்கத்துடன் இணைந்து உருவாகியுள்ள இந்த நிறுவனம், போட்டிகளுக்கிடையில் குறைந்தவிலை பயணக் கட்டணங்கள், இலவச உணவு, கூடுதல் பயணப்பெட்டி எடை போன்ற காரணங்களால் குறுகிய காலத்தில் மலேசியர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
-பெர்னாமா