ஜூன் 18- கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் மோசடி வழக்கில், பிரபல மலையாள நடிகை சாலு மேனன் சிக்குகிறார்.
கேரளா மற்றும் தமிழ்நாட்டில் வீடுகளில் சோலார் கருவி மற்றும் காற்றாலை அமைக்க அரசு மானியம் 60 சதவீதம் பெற்று தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த செங்கணூரை சேர்ந்த சரிதா என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் கேரளாவில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. சரிதாவால் ஏமாற்றப்பட்டவர்களின் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே செல்கிறது. இவருடைய 2வது கணவர் பிஜு ராதாகிருஷ்ணனும் மோசடியில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் பிஜு ராதாகிருஷ்ணன் தன்னிடம் ரூ.20 லட்சம் வாங்கி மோசடி செய்ததாக பிரபல மலையாள நடிகை சாலுமேனன், சங்கனாச்சேரி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பொய் புகார் கொடுத்துள்ளது தெரிய வந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மணக்காடை சேர்ந்த ரபீக் என்பவர், போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரில், நடிகை சாலுமேனனும், பிஜு ராதாகிருஷ்ணனும் சேர்ந்து, சிஸ் சோலார் நிறுவனத்தில் பங்குதாரர் ஆக்குவதாக கூறி ரூ.20 லட்சம் வாங்கி ஏமாற்றி விட்டனர் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே நடிகை சாலு மேனன் தலைமறைவாகி விட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால், தான் தலைமறைவாகவில்லை என்று அவர் நேற்று கூறினார். சாலுமேனன் மீது புகார் கூறப்பட்டுள்ளதால் அவரிடம் விரைவில் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.