ஜூன் 21 – சில தினங்களுக்கு முன்னால் ஸ்டார் பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட ‘மலேசியாவின் சக்திவாய்ந்த 10 பெண்மணிகள்’ பட்டியலைத் தான் சம்பந்தப்பட்ட நிறுவனம் எதுவும் வெளியிடவில்லை என்றும் தனக்கும் அந்த பட்டியல் பற்றி எதுவும் தெரியாது என்றும் டிஎச்ஆர் புகழ் கீதாஞ்சலி தெரிவித்துள்ளார்.
மலேசியாகினி இணைய செய்தித் தளத்திற்கு வழங்கிய பேட்டியில் அவர், “இந்தப் பட்டியலைத் தயார் செய்தது யார் என்பது எனக்கும் தெரியாது. ஆனால், இந்த பட்டியல் வெளியிடப்பட்டதால், அதனைச் சுற்றி எழுப்பப்பட்டு வரும் ஆரூடங்களால் எனது அமைதியான வாழ்க்கை சீர்குலைந்துள்ளது” என்றும் கூறியுள்ளார்.
அமைச்சர்கள் என்னை அழைத்துக் கேட்கின்றனர்
“அந்த பட்டியல் பற்றி அமைச்சர்கள் கூட என்னை அழைத்து விசாரிக்கின்றனர். தகவல் ஊடகத் துறையைச் சேர்ந்த பெரும் வணிகர்களும் என்னை அழைத்து நீங்கள் கேட்கும் அதே கேள்விகளைக் கேட்கின்றார்கள்” என மலேசியா கினி தொடர்பு கொண்டபோது கீதாஞ்சலி கூறியுள்ளார்.
நான் தொலைக்காட்சி மூலம் பிரபலமானவள்தான் ஆனால் இந்த பட்டியல் எனது வாழ்க்கையில் பல குளறுபடிகளை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் சார்ந்துள்ள, தகவல் ஊடக, தயாரிப்பு நிறுவனமான ஜி குளோபல் மீடியா நிறுவனம்தான், தனக்கு விளம்பரம் தருவதற்காக அந்த பட்டியலை விளம்பரமாக வெளியிட்டது எனக் கூறப்படும் ஆரூடங்களையும் கீதாஞ்சலி மறுத்துள்ளார்.
எனது திருமண வாழ்க்கை தனிப்பட்டது
தனது திருமண வாழ்க்கை பற்றியும் கீதாஞ்சலி சில விளக்கங்களைத் தெரிவித்துள்ளார்.
அவரது கணவர், அதிகமாக வெளியே தெரியாதவர், ஆனாலும் பெரும் பணக்காரர் என்று கூறப்படுகின்றது.
ஆனால் தனது கணவரின் அடையாளத்தை கூற விரும்பவில்லை அது எனது தனிப்பட்ட வாழ்க்கை என்றும் கீதாஞ்சலி விளக்கியுள்ளார்.
“இருப்பினும் வெஸ்ட்போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஜி.ஞானலிங்கம் தனது கணவரல்ல” என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இணையத் தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படும் இந்த விவகாரத்தைத் தொட்டுப் பேசிய கீதாஞ்சலி “ எனது பெயர் கீதாஞ்சலி ஜி என்பதாலும் ஞானலிங்கம் எல்லோராலும் டான்ஸ்ரீ ஜி என அழைக்கப்படுவதாலும் இந்த குழப்பம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அவர் எனது கணவரல்ல” என மறுஉறுதிப்படுத்தியுள்ளார்.
ஒரு நகைச்சுவை என எண்ணி சிரித்தேன்
சக்திவாய்ந்த பெண்மணிகள் பட்டியலில் 8வது இடத்தில் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கும் கீதாஞ்சலி “அந்த பட்டியலைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். அதற்குள் எனக்கு வாழ்த்துகள் வர ஆரம்பித்தன. இது உண்மையிலேயே ஒரு பெரிய நகைச்சுவைதான் என எண்ணி கடந்த இரண்டு நாட்களாக சிரித்துக் கொண்டிருக்கின்றேன்” என்றும் தெரிவித்துள்ளார்.
“எனக்கென ஒரு அங்கீகாரம் கிடைக்கிறது என்றால் அதனால் நான் இன்னும் கடுமையாக உழைப்பேன். ஆனால் என்னை அந்த பட்டியலில் உள்ள மற்றவர்களோடு – ஒரு சினிமா நட்சத்திரம், அரசியல்வாதிகள், சமூகப் போராளிகள், பொருளாதார மேதை, வங்கி உயர் அதிகாரி – போன்றவர்களோடு ஒப்பிட்டுள்ளது எனக்கு சங்கடமாக உள்ளது, அதோடு நம்ப முடியாததாகவும் உள்ளது” என ஆஸ்ட்ரோ வானவில்லில் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்திவரும் முன்னாள் அழகிப் போட்டியாளரான கீதாஞ்சலி மேலும் விவரித்துள்ளார்.
அந்தப் பட்டியிலில் முதல் இடம் பிடித்துள்ள பிரதமரின் துணைவியாரும், மற்ற இடங்களைப் பிடித்துள்ள அம்பிகா சீனிவாசன், நுருல் இசா போன்றோரும் தன்னைவிட மிகச் சிறந்த பெண்மணிகள் என்றும் அந்தப் பட்டியலில் இடம்பெற தனக்கு தகுதியில்லை என்றும் கீதாஞ்சலி குறிப்பிட்டுள்ளார்.