பெட்டாலிங் ஜெயா, ஜூலை 6 – மலேசியாவில் சமநிலையில் இருந்த இனவாதப் பகிர்வின் மென்மையான போக்கு ஜசெக கட்சியால் பாதிப்படைந்துள்ளது.
அதோடு நடந்து முடிந்த 13 வது பொதுத்தேர்தல் முடிவுகளால் மலாய் – சீன இனங்களுக்கிடையே பிளவு ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் பிரதமர் டாக்டர் துன் மகாதீர் முகமட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் “இதில் மறுக்க முடியாத உண்மை என்னவென்றால், தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சிகளுக்கிடையே நிலவிய ஒற்றுமையையும், புரிதலையும் ஜசெக வெற்றிகரமாக உடைத்து வருகிறது” என்று தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இனவாதப் பிளவு மேலும் ஆழமாகிறது என்றால் அதற்கு ஜசெக கட்சி மலாய், சீன, இந்திய “கோங்சி” இனங்களை ஒதுக்குவது தான் காரணம் என்றும் மகாதீர் தெரிவித்துள்ளார்.
“பொருளாதாரத்தில் ஏற்கனவே முன்னேறியுள்ள சீனர்கள், மலேசிய அரசியலிலும் மற்ற இனங்களைக் காட்டிலும் முன்னேறிச் செல்வதையே ஜசெக விரும்புகிறது.இது முற்றிலும் இனவாதம் நிறைந்தது என்பதோடு, தேசிய முன்னணி இனங்களுக்கிடையே ஏற்படுத்திவரும் சமநிலைப் பகிர்வை புறந்தள்ளுகிறது” என்று மகாதீர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், “தேர்தல் முடிவுகளை எதிர்த்து அரசாங்கத்திற்கு எதிராக பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பேரணிகளை நடத்தினாலும், அதில் கலந்து கொள்ளும் மக்களை வைத்துப் பார்க்கும் போது அது சீனர்களின் ஆதிக்கமாகவே தோன்றுகிறது. அதில் அதிகம் பாஸ் கலந்துகொள்வதில்லை” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதோடு, “இனவாதம் இப்போது அதிகம் பேசப்படத் தொடங்கிவிட்டது. இது எதிர்காலத்தில் மேலும் வளரும்” என்றும் மகாதீர் எச்சரித்துள்ளார்.