கோத்தா கினபாலு, செப் 11 – சபா மாநிலத்தில் கள்ளக்குடியேறிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்ட விவகாரத்தில் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட், இன்று அரச விசாரணை ஆணையத்திடம் சாட்சியம் அளித்தார்.
அதில், ‘புராஜெக்ட் ஐசி’ அல்லது ‘புராஜெக்ட் மகாதீர்’ என்று சொல்லப்பட்டும் கள்ளக் குடியேறிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்ட திட்டம் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்தார்.
பிறகு எதற்காக ‘புராஜெக்ட் மகாதீர்’ என்ற வார்த்தை அதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று விசாரணையை நடத்தும் அதிகாரி மனோஜ் குரூப் கேட்டதற்கு, அந்த திட்டம் குறித்து சமீபத்தில் தான் கேள்விப்பட்டதாகவும், தனது பெயரை சிலர் எது எதற்கோ பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றும் மகாதீர் பதிலளித்துள்ளார்.
“என்னை இனவாதி, தீவிரவாதி என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால் அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. இதெல்லாம் அரசியலில் நடப்பது தான்” என்று மகாதீர் தெரிவித்தார்.