கோலாலம்பூர், செப் 12 – சபா மாநிலத்தில் கள்ளக்குடியேறிகளுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை(புராஜக்ட் ஐசி) விவகாரத்தில் தனக்கு எதுவும் தெரியாது என்று நேற்று அரச விசாரணை ஆணையத்திடம் (RCI) சாட்சியம் அளித்த முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட், இன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் எதிர்கட்சித் தலைவர் அன்வார் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
‘புராஜக்ட ஐசி’ குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று நான் கூறுவதை பொய் என்று கருத்து கூறுபவர்கள், இவ்விவகாரத்தில் எதிர்கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவர் மௌனமாக இருக்கிறாரே அவரை ஏன் கேள்வி கேட்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“நான் பிரதமராக இருந்த காலத்தில் அந்த எதிர்கட்சித் தலைவரும் அரசாங்கத்தில் தான் இருந்தார். அரசின் கொள்கையை அவரும் அறிவார். அரசு அப்போது அப்படி ஒரு கொள்கையை அமல்படுத்தியிருந்தால் அவர் ஏன் அதைத் தடுக்கவில்லை” என்றும் மகாதீர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்கட்சியைச் சேர்ந்த தலைவர் என்று அவர் குறிப்பிடுவது அன்வார் இப்ராகிமையா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இருக்கலாம்” என்று பதிலளித்துள்ளார். ஆனால் அன்வாரின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.