கோலாலம்பூர், அக் 9 – பிரபல பாடலாசியர் யுவாஜியின் வெள்ளைப்புறா நாவல் கடந்த சனிக்கிழமையன்று (அக்டோபர் 5) தலைநகரிலுள்ள டான்ஸ்ரீ சோமா அரங்கில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணையமைச்சர் டத்தோ சரவணன், ஜி குளோபல் மீடியா நிறுவனர் கீதாஞ்சலி ஜி, தொழிலதிபர் சுந்தரராஜ் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
‘மெர்ப் பதிப்பகம்’ சார்பில் வெளியிடப்பட்ட இந்த நாவல், யுவாஜியின் நிஜ வாழ்வில் நடந்த பல சுவையான சம்பவங்களையும், காதல், கவிதை என பல உணர்வுகளையும் உள்ளடக்கியது.
இவ்விழாவை துவக்கி வைக்கும் நோக்கில் வெள்ளைப்புறா ஒன்றை டத்தோ சரவணன் அதன் கூண்டிற்குள் இருந்து திறந்து விடுவது போன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ்விழாவில் பேசிய கீதாஞ்சலி ஜி, யுவாஜியின் நாவல் குறித்தும், அவரது பாடல் வரிகள் குறித்தும் வெகுவாகப் பாராட்டினார்.
மேலும் பினாங்கு மாநிலத்தில் பல சமூகப்பணிகளை செய்துவரும் தொழிலதிபர் சுந்தரராஜ் அவர்களும் யுவாஜியின் திறமை குறித்தும், அவரது நாவல் குறித்து எடுத்துரைத்தார்.
நாவல் குறித்து துணையமைச்சர் சரவணன் கூறுகையில், “இன்றைய காலத்தில் உறவுகள் ஒட்டாமல் இருக்கின்றன. பழகும் வரை பழகிவிட்டு நீ உன் வழியைப் பார் நான் என் வழியைப் பார்த்துக்கொள்கிறேன் என்று பிரிந்துவிடுகிறார்கள். கற்றல் வழி நடக்க வேண்டும். வாழ்வில் வெற்றியடைய கடுமையாகப் போராட வேண்டும். அந்தவகையில் யுவாஜி போன்ற எழுத்தாளர்கள் நல்ல படைப்புகளை மக்களுக்குத் தருவார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
யுவாஜியின் வெள்ளைப்புறா நாவலை தொழிலதிபர் சுந்தரராஜ் அவர்கள் 3000 ரிங்கிட் கொடுத்தும், சரவணன் அவர்கள் 2000 ரிங்கிட் கொடுத்தும், கீதாஞ்சலி ஜி அவர்கள் 5000 ரிங்கிட் கொடுத்தும் நூலை வாங்கி சிறப்பித்தனர்.
இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு மெர்ப் பதிப்பகம் பல முயற்சிகளை செய்து வருகிறது. அந்த வகையில் “யுவாஜியின் வெள்ளைப்புறா’ போன்ற நல்ல படைப்புகளை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் தாங்கள் பெருமையடைவதாக மெர்ப் பதிப்பகத்தின் நிறுவனர் பிரேம்நாத் மற்றும் நந்தினி ஆகியோர் தெரிவித்தனர்.
– பீனிக்ஸ்தாசன்