கோலாலம்பூர், அக் 10 – 2012 ஆம் ஆண்டிற்கான தலைமை கணக்காய்வாளர் அறிக்கையின் படி, அரசாங்கத்தின் திறமைக்குறைவும், நிர்வாக சீர்கேடுகளும் தெளிவாகத் தெரிகிறது.
எனவே அதற்கு பொறுப்பேற்று சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் துன் மகாதீர் முகமட் கூறியுள்ளார்.
இன்று செராஸில் பாதாள ரயில் பாதை கட்டுமானப்பணிகளைப் பார்வையிட வந்த மகாதீர், “ஜப்பானில் விமான நிலையத்தில் ஏதாவது விமான விபத்து ஏற்பட்டால், அந்நாட்டின் போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவி விலகுவார்.
ஆனால் மலேசியாவில் ஏதாவது அது போன்ற விபத்துக்கள் நேர்ந்தால் சம்பந்தப்பட்ட அமைச்சர் அது தனது பொறுப்பல்ல என்பார். சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் தவறுகளுக்குப் பொறுப்பேற்று பதவி விலகுவதையே நான் விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.
அத்துடன், “நான் தோற்றுப் போனேன். அதனால் தான் பதவி விலகினேன்” என்று வேடிக்கையாக மகாதீர் கூறினார்.