கோலாலம்பூர், நவ 16- முக அழகை வெளிப்படுத்த பெண்கள் அதிக அக்கறை எடுப்பார்கள். கண் இமைகளை அலங்கரிப்பதிலும், உதடுகளை அலங்கரிக்கவும் ஆர்வம் இருக்கும். உதடுகளை சரியாக பராமரிக்காவிட்டால் தோல் உரிந்தும், வறண்டும் காணப்படும். இதே போன்ற பிரச்னை இல்லாமல் உதடுகளை பராமரிக்க பெண்களுக்கு பல வழிகள் உள்ளன.
வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உதடுகளை வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால், மென்மையாக மாறும். உதடுகளை கடிக்கும் பழக்கம் சிலருக்கு இருக்கும். அவ்வாறு உதட்டை கடிப்பதால் உதடு வறண்டு, நிறம் மாறி காணப்படும். எனவே உதட்டை கடிக்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.
உதட்டு சாயம் போடும் போது மிக கவனம் தேவை. சக தோழிகள் உபயோகிக்கும் உதட்டு சாயத்தை பகிர்ந்து போடக்கூடாது. அவ்வாறு உபயோகித்தால் மற்ற பெண்களிடம் இருந்து எதாவது தொற்று கிருமிகள் பரவும். தரமான உதட்டு சாயத்தை பயன்படுத்த வேண்டும். தரமில்லாத உதட்டு சாயத்தை பயன்படுத்தினால் உதடுகள் கருப்பாக மாறும். உதட்டு சாயத்தைப் போட பயன்படுத்தும் தூரிகையை உடனுக்குடன் சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்யாமல் பயன்படுத்தினால் தொற்று கிருமிகள் பரவ வாய்ப்புள்ளது.