புதுடெல்லி,பிப்.12- உத்தரப் பிரதேச மாநிலம் அலாகாபாத் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த கும்பமேளா பக்தர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.
படுகாயமடைந்த 39 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 3 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. எனவே உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் பெண்களே அதிகம்: ஞாயிற்றுக்கிழமை தை அமாவாசை என்பதால் திரிவேணி சங்கமத்தில் நீராட சுமார் 3 கோடி பக்தர்கள் வந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் ஊர் திரும்புவதற்காக அலாகாபாத் ரயில் நிலையத்துக்கு வந்தனர். இதனால் ரயில் நிலையமே மக்கள் வெள்ளத்தில் மிதந்தது. இரவு சுமார் 7 மணியளவில் 5, 6-வது நடைமேடைகளுக்கு நடுவே கடும் நெரிசலும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதில் கீழே விழுந்து மிதிபட்டும், மூச்சுத் திணறியும் 36 பேர் உயிரிழந்துவிட்டனர்.
உயிரிழந்தவர்களில் 26 பேர் பெண்கள், ஒரு குழந்தை, 9 ஆண்கள் எனத் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 14 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தனர். இவர்களில் 20 பேர் யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
நெரிசலுக்குக் காரணம்: கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் ஏற்பட்ட பீதியால்தான் நெரிசல் ஏற்பட்டது என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால் தடியடி ஏதும் நடத்தவில்லை என்று ரயில்வே போலீஸ் நிர்வாகம் மறுத்துள்ளது.
அதேபோல 4-வது நடைமேடை அருகே வருவதாக இருந்த ரயில் கடைசி நேரத்தில் 6-வது நடைமேடைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பெருமளவிலான மக்கள் திடீரென எதிர் திசையில் திரும்பி வேகமாக ஓடத் தொடங்கினர். இதனால்தான் பிளாட்பாரங்களுக்கு இடையே உள்ள பாலத்தில் கடுமையான நெரிசலும், தள்ளு முள்ளும் ஏற்பட்டது. மக்கள் ஒருவர் மீது ஒருவர் மோதி கீழே விழுந்தனர். தொடர்ந்து நெரிசல் ஏற்பட்டதால் பலர் உயிரிழந்துவிட்டனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடைமுறையில் போலீஸார் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டிருந்தால் இந்த சம்பவத்தை தவிர்த்திருக்க முடியும் என்று நெரிசலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் ஒருவர் கூறியுள்ளார்.
ரயில்வே, மாநில அரசு விசாரணை: இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று வடக்கு மத்திய ரயில்வே பொது மேலாளர் அலோக் ஜோஹ்ரி தெரிவித்துள்ளார்.
அலாகாபாதில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் இன்னும் 3 நாள்களுக்கு இதுபோன்ற புனித நீராடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அப்போதும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். எனவே இதற்காக ரயில்வே விரிவான ஏற்பாடுகளை கவனமாக மேற்கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
மாநில அரசும் இது தொடர்பாக விசாரிக்க விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அலாகாபாதில் இருந்து 6 ஆயிரம் சிறப்பு பஸ்களை இயக்கவும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறுவது, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட மீட்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்துமாறு அமைச்சர்களுக்கும், அரசு உயரதிகாரிகளுக்கும் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
தலைவர்கள் இரங்கல்: பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். மீட்பு நடவடிக்கைகளில் உத்தரப் பிரதேச அரசுடன் இணைந்து செயல்படுமாறு மத்திய அரசின் அனைத்துத் துறைகளுக்கும் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார்.
கும்பமேளா பொறுப்பாளர் விலகல்:
இந்த சம்பவத்தை அடுத்து உத்தரப் பிரதேச மாநில அமைச்சரான ஆஸம் கான், கும்பமேளா நிகழ்ச்சியின் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார். இந்த சோக சம்பவம் கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்ற பகுதிக்கு வெளியேதான் நடைபெற்றுள்ளது. எனினும் இதற்கு தார்மீக பொறுப்பேற்று கும்பமேளா நிகழ்ச்சி பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுகிறேன். கும்பமேளாவுக்காக மிகச்சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தேன். எனினும் இந்த சம்பவம் என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
3 கோடி பேரை சமாளிப்பது கடினம்: ரயில்வேஇந்த சம்பவத்தில் ரயில்வே நிர்வாகத்தின் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் இதனை மறுத்துப் பேசிய பன்சல், “அலாகாபாத் நகருக்கு ஒரே நாளில் சுமார் 3 கோடி பேர் வந்துள்ளனர். இதற்கு ஏற்ப ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஏற்கெனவே ரயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. எனினும் ஒரே இடத்தில் இருந்து 3 கோடி பேருக்கு ரயில் வசதி செய்து கொடுக்கும் திறன் ரயில்வே நிர்வாகத்துக்குக் கிடையாது. அலாகாபாத் ரயில் நிலையத்தில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த 10 நிமிடத்துக்கு ஒரு ரயிலை இயக்கியிருக்க வேண்டுமென்று கூறுவது சாத்தியமில்லாத ஒன்று. சாலைகளில் வாகனங்களை இயக்குவது போல ரயில்களை இயக்க முடியாது. அதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன என்று பன்சல் தெரிவித்தார்.