சென்னை, ஜன 27 – “அ.தி.மு.க., கூட்டணிக்கு, நம்மால் முடிந்த ஆதரவு உண்டு,” என சமீபத்தில் அரசியலில் இருந்து விலகியதாக அறிவித்த, பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார். அதனால், லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க ஆதரவாக அவர் பிரசாரம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குடியரசு தின நிகழ்ச்சிகள் முடிந்து, தலைமைச் செயலகம் வந்த முதல்வர் ஜெயலலிதா, 2013 ம் ஆண்டிற்கான தமிழக அரசின், அண்ணா விருதை பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு வழங்கினார்.
மேலும், பாரதியார் விருது, அம்பேத்கர் விருது, பெரியார் விருது மற்றும் பாரதிதாசன் விருதுகளையும், அந்த விருதுக்காக தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு வழங்கினார்.
இது குறித்து பண்ருட்டி ராமச்சந்திரன் நிருபர்களிடம் ராமச்சந்திரன் கூறுகையில்,
” நான், 1964ல், உதவி பொறியாளராக பணியாற்றிய போது, அண்ணாதுரையால் ஈர்க்கப்பட்டு, அரசியலுக்கு வந்தேன். ஜெயலலிதாவும், அவர் வழியில் செயல்பட்டு வருகிறார். அண்ணாதுரையை நம்பியவன் என்பதற்காக, எனக்கு விருது வழங்கப்பட்டு உள்ளது. இதை அரசியலாக்க கூடாது,” என்றார்.
முற்போக்கு கொள்கையுடைய ஆட்சி அமைய வேண்டும். அ.தி.மு.க.,வும், கம்யூனிஸ்ட்களும் இணைந்து, முற்போக்கு கூட்டணியை அமைத்துள்ளன. அந்த கூட்டணிக்கு நம்மால் முடிந்த ஆதரவை தருவோம். இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் “ஏழை, பணக்காரர் என்ற முரண்பாடுகளை மாற்றி அமைக்க, முற்போக்கு சிந்தனை தேவை. விரைவில், டில்லியில் அரசியல் மாற்றம் ஏற்படும் சூழல் உள்ளது. அ.தி.மு.க., கூட்டணிக்கு, நம்மால் முடிந்த ஆதரவு உண்டு” என பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்திருப்பதன் மூலம், லோக்சபா தேர்தலில், அவர் அந்தக் கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.