Home மலேசியா சாபாவிலிருந்து வந்த பிலிப்பினோக்கள் பற்றிய வேறுப்பட்ட கருத்துகள்

சாபாவிலிருந்து வந்த பிலிப்பினோக்கள் பற்றிய வேறுப்பட்ட கருத்துகள்

708
0
SHARE
Ad

sabahசாபா, பிப்.15- தென் பிலிப்பீன்சின் கிளர்ச்சிப் படையிலிருந்து பிரிந்தவர்கள் என்று கருதப்படும் ஆயுதமேந்திய சுமார் 100 பேர் அடங்கிய ஒரு கும்பலைப் பிடித்து வைத்திருப்பதாக மலேசிய போலீசும் அரசாங்க அதிகாரி ஒருவரும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், பிலிப்பீன்ஸ் நாட்டு அதிகாரி ஒருவர், அவர்கள் ஆயுதமற்ற பிலிப்பீனோக்கள் என்றும் நிலம் கொடுக்கப்படுவதாகக் கூறப்பட்டதை நம்பி வந்தவர்கள் என்றும் கூறினார்.

இவ்விவகாரம் அண்டை நாடுகளான மலேசியாவுக்கும் பிலிப்பீன்சுக்குமிடையில் சர்ச்சையை உண்டாக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

#TamilSchoolmychoice

மலேசிய போலீஸ், நிலைமை “கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக”க் கூறியது. ஆனால், அந்த 100 பேரும் போலீசின் கோரிக்கையை ஏற்று சரணடைந்தார்களா என்பதை அது தெரிவிக்கவில்லை.

“இது தென் பிலிப்பீன்சைச் சேர்ந்த ஆயுதம் தாங்கிய 100 பேர் சம்பந்தப்பட்ட விவகாரம்.

“இராணுவமும் போலீசும் அந்த வெளிநாட்டவர் உள்ள இடத்தைச் சுற்றி வளைத்துக்கொண்டுள்ளனர்”, என்று மலேசிய உயர் அதிகாரி ஒருவர் ராய்ட்டரிடம் தெரிவித்தார்.

அத் துப்பாக்கிக்காரர்கள், பிலிப்பீன்சின் தெற்கு மிண்டானாவ் தீவில் முக்கிய கிளர்ச்சித் தரப்புடன் அந்நாட்டு அரசாங்கம் செய்துகொண்ட அமைதி உடன்பாட்டில் திருப்தி அடையாத ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுவதாக அவர் சொன்னார்.

ஆனால், அவரது கூற்றை பிலிப்பின்ஸ் அதிகாரி ஒருவர் மறுத்தார். அவர்கள் ஆயுதம் ஏதுமற்ற பிலிப்பீனோக்கள் என்றும் நிலம் தரப்படுவதாகக் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நம்பிச் சென்றவர்கள் என்றும் சொன்னார்.

மேலும், அவர்கள் நிலம் கோரி கூட்டமாகச் சென்றதைப் பெரும் கூட்டம் கூடி நின்று பார்த்தது. அது அரசாங்க அதிகாரிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்றாரவர்.

“ஐந்து நாள்களுக்கு முன்பே அவர்கள் அங்கு சென்றடைந்ததை அறிவோம். அவர்களில் பெரும்பாலோர் அருகில் உள்ள தீவுகளைச் சேர்ந்தவர்கள்”, என்று தம்மை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பாத அவ்வதிகாரி குறிப்பிட்டார்.

“அவர்களில் சிலர், நீண்ட காலமாகவே சாபாவில் வசித்து வருகிறார்கள். அவர்கள், வழக்கமாக எந்தப் பிரச்னையுமின்றி எல்லை கடந்து போவார்கள், வருவார்கள்”.

பிலிப்பீன்ஸ் அரசாங்கம், முஸ்லிம் கிளர்ச்சிக்காரர்களுடன் 40-ஆண்டுகள் நிலவி வந்த சண்டைக்கு முடிவு காணும் வகையில் கடந்த ஆண்டில் அவர்களுடன் அமைதி உடன்பாடு ஒன்றைச் செய்துகொண்டது. ஆனால், சில தரப்பினர் அதை எதிர்த்தனர்.

“மலேசியாதான் அந்த அமைதி உடன்பாட்டுக்கு ஏற்பாடு செய்தது என்பதால் சாபாவில் தொல்லைகள் உண்டுபண்ண கிளர்ச்சிப் படையிலிருந்து பிரிந்துசென்ற மிஸ்வாரி தரப்பினர் முடிவு செய்தார்கள்”, என்று அந்த மலேசிய உயர் அதிகாரி கூறினார்.

இதற்குமுன், 2000ஆம் ஆண்டில் தென் பிலிப்பீன்சைச் சேர்ந்த போராளிக் கும்பல் ஒன்று சிபாடான் ஓய்வுத்தளத்திலிருந்து 21 சுற்றுப்பயணிகளைக் கடத்திச் சென்றது.

1985-இல், தென் பிலிப்பீன்சைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படும் துப்பாக்கிக்காரர்கள், லாஹாட் டத்துக்குள் நுழைந்து 11பேரைசு சுட்டுக் கொன்றதுடன் ஸ்டேண்டர்ட் சார்டட் பேங்க் கிளையிலும் மலேசிய விமான நிறுவன அலுவலகத்திலும் புகுந்து ரிம200,000  பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றனர்.