காட்மண்டு, மார்ச் 24 – தற்போது நடுத்தர வருமானம் கொண்ட நாடாக இருக்கும் மலேசியா, வரும் 2020 ஆம் ஆண்டிற்குள் அதிக வருமானம் கொண்ட நாடாக உருமாறும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளார்.
மலேசிய அரசாங்கம் அதற்கான திட்டங்களை வகுத்து அதற்கேற்ற படி, பணியாற்றி வருவதாகவும் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.
காட்மண்டுவில் நேற்று நடைபெற்ற நேபாள் வர்த்தக கூட்டம் 2014 ல் கலந்து கொண்ட மகாதீர் உரையாற்றுகையில், “மலேசியாவை கண்டறிந்த மூதாதையர்கள் அதன் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து திட்டங்கள் மற்றும் நவீனமயமாக்கல், தொழில்மயமாக்கல் ஆகிய அனைத்தையும் வகுத்துச் சென்றுவிட்டனர். அதை நான் பின்பற்றினேன் அவ்வளவு தான்” என்று தான் பிரதமராக இருந்த காலத்தை நினைவு கூர்ந்தார்.
மேலும், “மலேசியா சுதந்திரம் அடைந்த சமயத்தில், 50 சதவிகித மக்கள் ஏழ்மை நிலையில் இருந்தனர். அந்த நேரத்தில் தேசத் தலைவர்கள், மக்களின் ஏழ்மையை ஒழித்தல், சமூக நல்லிணக்கம், அரசியல் சக்தியை நிலைநாட்டுதல், பொருளாதாரத்தை முன்னேற்றுதல் போன்ற கொள்கைகளை வகுத்தனர். இந்த கொள்கைகள் தான் பின்னர் மலேசியா ஏழ்மை நிலையில் இருந்து நடுத்தர நிலைக்கு உயர்ந்தது” என்றும் மகாதீர் குறிப்பிட்டார்.