சென்னை, பிப்.15- முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தியின் அண்ணன் ராமமூர்த்தியின் மகன் பிரகாஷ் , நல்லி திருமணம் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நேற்று நடந்தது.
திருமணத்தை நடத்தி வைத்து பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது, இந்தியாவில்தான் காதலர் தினம் கொண்டாட உற்சாகப்படுத்துகின்றனர்.
மேற்கத்திய கலாசாரத்தை உருவாக்கி இளம்பெண்களிடம் காம உணர்வை தூண்டி, பல சீரழிவுகளை ஏற்படுத்த பார்க்கின்றனர். ஆசிட் வீச்சில் உயிரிழந்த வினோதினியின் செய்தியை படிக்க வேதனையாக உள்ளது. இதற்கும் பெயர் வைத்துள்ளனர். இது ஒருதலை காதலாம்.
ஒரு தினத்தை கொண்டாடுவதை ஐ.நா. அறிவிக்கும். அன்னையர் தினம், தாய்மொழி தினம் என்றெல்லாம் ஐ.நா.வால் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை எல்லாம் விட்டுவிட்டு காதலர் தினம் எனும் நச்சு கலாசாரத்தை பெரிதுபடுத்தி பூங்காக்கள், கடற்கரையில் கூடுங்கள், பரிசு வாங்கி கொடுங்கள் என்ற ஒரு புதிய கலாசாரத்தை உருவாக்க உற்சாகப்படுத்துகிறார்கள்.
ஊடகங்களும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. இதுபற்றி சொன்னால் ராமதாஸ் இப்படி எல்லாம் பேசுகிறார் என்கிறார்கள். சமூக அக்கறையோடு சொல்ல வேண்டியது எனது கடமை. தமிழ் குடிமக்களை குடி இல்லா மக்களாக வாழ வைக்க வேண்டும் என்பது போன்ற நோக்கங்களுக்காக பாடுபட்டு வருகிறோம். இவ்வாறு ராமதாஸ் எடுத்துரைத்தார்.