அரசு மற்றும் பெருநிறுவனங்களின் பயன்பாட்டில் மட்டும் இருந்த கணினித் தொழில்நுட்பம், ‘பெர்சனல் கம்பியூட்டர்’ எனப்படும் தனிநபர் கணினிகளின் வழிதான் பொதுமக்களின் பயன்பாடிற்கு வந்தது.
இந்தத் தனிநபர் கணினிகளின் தோற்றமும் பயன்பாடும் தொடக்க காலத்தில் மேற்கு நாடுகளிலேயே இருந்ததால், இவற்றின் ‘ஆட்சி மொழியாக’ ஆங்கிலமே மேலோங்கி இருந்தது. கணினியை இயக்கும் கட்டளைகளும் அவற்றிற்கேற்பக் கணினி வழங்கும் மறுமொழியும் ஆங்கிலத்திலேயே இருந்தது — அதுவும் அமேரிக்க ஆங்கிலத்திலேயே இருந்தது.
தனிநபர் கணினிகள் உலகளாவிய பயன்பாட்டிற்கு வந்த போதுதான் மற்ற மொழிகளிலும் இந்தக் கணினிகள் இயங்கவேண்டிய தேவை ஏற்பட்டது. ஆங்கிலம் இரண்டாம் மொழியாகக் கூட இல்லாத நாடுகளின் தாய்மொழிகள் முதலில் சேர்க்கப் பட்டன. ஜெர்மன், பிரஞ்சு, இத்தாலி போன்ற ஐரோப்பிய மொழிகள், சீனா, ஜப்பான், கொரியா மற்றும் அரபு மொழிகள் முதலில் சேர்க்கப்பட்டன.
இந்தியாவில் ஆங்கிலப் புழக்கம் அதிகமாக இருந்ததாலும், கணினி வாங்கக் கூடிய வசதி உள்ளவர்கள் ஆங்கிலதில் பேசவும் எழுதவும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்ததாலும் இந்திய மொழிகளைக் கணினியில் சேர்க்க வேண்டிய கட்டாயம் எந்தக் கணினி நிறுவனத்திற்கும் ஏற்பட்டதில்லை. சீனா, ஜப்பான் நாடுகளைப்போல இந்திய மொழிகளின் தேவையைக் கட்டாயப் படுத்தும் சட்டம் எந்த நாட்டிலும் இல்லை.
இரண்டாயிரமாம் ஆண்டிற்குப் பிறகே, இந்திய மொழிகள் கணினிகளுக்குள் இயல்பாக ஊடுருவத் தொடங்கின. தமிழும் அவ்வாறே இயல்பாகக் கணினிகளில் இடம்பெறத் தொடங்கியது. அதுவரை, தமிழ் ஆர்வம் உள்ள கணினி வல்லுநர்கள் (கணிஞர்கள்) அவரவர் சிந்தனைக்கேற்பத் தமிழ் மொழியின் பயன்பாட்டைக் கணினிக்குள் சேர்த்தனர். ஒன்றுபடுத்தப்பட்ட தமிழ்த் தொழில்நுட்பத் தரங்கள் (Tamil technology standards) அதன்பின் அறிமுகப்படுத்தப் பட்ட போதும், பழைய முறைகள் பல காரணங்களுக்காக இன்றும் கூட ஒருமைப்படுத்தப்பட்ட தரங்களுக்கு மாறவில்லை.