கொழும்பு, ஏப்ரல் 10 – இலங்கையின் பொருளாதாரம் இந்த ஆண்டும் 7.3% வளர்ச்சியைக் காணும் என்று கூறிய உலக வங்கியின் கருத்துக்கள் குறித்து மாற்றுக் கருத்துக்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. தெற்காசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்து உலக வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது.
உட்கட்டமைப்பு வசதிகளில் செய்யப்படும் முதலீடுகள் காரணமாகவே இந்த வளர்ச்சி சாத்தியப்படும் எனவும் உலக வங்கி கூறியுள்ளது.
ஆனால் உலக வங்கியின் இந்தக் கணிப்பீடு நம்பத்தகுந்த வகையில் இல்லை என்று இலங்கை பொருளாதார ஆய்வாளர் டாக்டர் முத்துகிருஷ்ணா சர்வானந்தன் தெரிவித்துள்ளார்.
உலக வங்கி போன்ற பன்னாட்டு அமைப்புகள், அந்தந்த அரசுகள் கொடுக்கும் தரவுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் தான் தமது கணிப்பீடுகளைச் செய்கின்றன எனக் கூறும் அவர், அரசின் தரவுகள் குறித்து சந்தேகங்களும் கேள்விகளும் எழும் நிலையில் எப்படி உலக வங்கியின் அறிக்கையில் யதார்த்த நிலை இருக்க முடியும் என்றும் கேட்கிறார்.
போர் காலத்தில் கூட இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதம் அல்லது அதற்கு சற்று கூடுதலாக இருந்தது என்றும், போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் ஆகும் நிலையில் 7. 3 சதவீத வளர்ச்சி என்பதை பெரிய முன்னேற்றமாக கருத முடியாது. மேலும் நாட்டின் மூன்று மாகாணத்தில் மட்டுமே உட்கட்டமைப்புகள் உட்பட பல பொருளாதார வளர்ச்சிகள் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு ஏற்பட்டுள்ளன, வடகிழக்கு உட்பட நாட்டின் பெரும்பாலானப் பகுதிகளில் அத்தகைய வளர்ச்சியை காண முடியவில்லை என்றும் டாக்டர் சர்வானந்தன் கூறியுள்ளார்.