Home நாடு புவான்ஸ்ரீ ஜானகி ஆதி நாகப்பன் காலமானார்

புவான்ஸ்ரீ ஜானகி ஆதி நாகப்பன் காலமானார்

1260
0
SHARE
Ad

Janaki_thevarகோலாலம்பூர், மே 9 – மஇகாவிலும் அரசாங்கத்திலும் இந்திய சமுதாயத்தைப் பிரதிநிதித்து பல்வேறு பதவிகள் வகித்தவரும் நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் பணியாற்றி நாட்டுக்குப் புகழ் சேர்த்தவருமான புவான்ஸ்ரீ ஜானகி ஆதி நாகப்பன் முதுமையினால் இன்று காலை 7.30 மணியளவில் காலமானார்.

அவருக்கு வயது 89.

ஜானகி ஆதிநாகப்பன், மஇகாவின் முன்னாள் தேசியத் துணைத் தலைவராகவும், சட்டத்துறை அமைச்சராகவும் பணியாற்றிய அமரர் செனட்டர் டான்ஸ்ரீ ஆதிநாகப்பனின் துணைவியாருமாவார்.

#TamilSchoolmychoice

டான்ஸ்ரீ ஆதி நாகப்பன் சரியாக 38 ஆண்டுகளுக்கு முன் இதே மே 9இல் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு பதவிகள் – பல்வேறு சிறப்புகள்

மலேசிய மேலவை உறுப்பினராக (செனட்டர்) பொறுப்பேற்ற முதல் இந்தியப் பெண்மணி புவான்ஸ்ரீ ஜானகி ஆதி நாகப்பன் ஆவார்.

சில காலமாகவே நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அவர் இயற்கை எய்தியதை ஜானகியின் மகன் ஈஸ்வர் நாகப்பன் உறுதிப்படுத்தினார்.

புவான்ஸ்ரீ ஜானகி ஆதி நாகப்பன் மஇகாவை நிறுவியர்களில் ஒருவர். மலேசியாவின் சுதந்திரத்திற்குப் போராடிய பழம் பெரும் முன்னோடிகளில் ஒருவர்.

நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து இந்தியாவின் விடுதலைக்காகப் போராடியவர் ஜானகி.

தன்னுடைய 18ஆவது வயதிலேயே இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து, ஜான்சி ராணி படையில் துணைத் தளபதியாகப் பணியாற்றி பதவி வகித்தவர்.

இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் மலேசியப் பெண்மணியும் ஜானகிதான்.

இவ்வாறு பல்வேறு சிறப்புக்களைப் பெற்ற ஜானகி, கணவரின் மறைவுக்குப் பின்னரும் அரசியலில் தொடர்ந்து ஈடுபட்டு, மஇகாவின் தேசிய மகளின் தலைவியாகவும் பணியாற்றியுள்ளார்.

மஇகாவின் மகளிர் பகுதி சார்பில் மலேசிய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக 1980ஆம் ஆண்டில் நியமனம் செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் பதவி வகித்தார்.

மலேசிய நாடாளுமன்றத்தின் மேலவையில் இடம் பெற்ற முதல் மலேசிய இந்திய வம்சாவளிப் பெண்மணியும் இவர்தான்.

இவ்வாறு பல்வேறு சிறப்புகளைப் பெற்ற ஜானகி ஆதிநாகப்பனின் இறுதிச் சடங்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 11.5.2014ஆம் நாள் காலை மணி 9.00க்கு எண் 60ஏ, ஜாலான் குவாந்தான், தித்திவங்சா, கோலாலம்பூர் எனும் முகவரியிலுள்ள அவரின் இல்லத்தில் நடைபெறும்.

இறுதி சடங்கிற்குப் பின்னர் அன்னாரின் நல்லுடல் செராஸ் மின்டலையில் தகனம் செய்யப்படும் என்று அவரது புதல்வர் ஈஸ்வர் நாகப்பன் தெரிவித்துள்ளார்.