கொழும்பு, மே 19 – விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் போராளி இசைப்பிரியா, இலங்கையில் நடந்த இறுதிக்கட்டபோரின் போது மிகவும் கோரமான முறையில் உயிரிழந்திருந்தார். இராணுவத்தினருடனான மோதல் ஒன்றின் போது அவர் கொல்லப்பட்டதாக இராணுவத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த 2010 ஆம் ஆண்டில் இவர் கொலை செய்யப்பட்ட படங்கள் ஊடகங்களில் வெளியாகின. தற்போது அதனை உறுதி செய்யும் விதமாக இராணுவத்தின் பிடியில் உயிருடன் இருக்கும் புகைப்பட ஆதாரம் வெளியாகியுள்ளது.
இராணுவத்தினரிடம் சரணடைந்த இசைப்பிரியா, கொடூரமான முறையில் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான விவரங்களை அல்ஜசீரா ஊடகத்தின் பெண் ஊடகவியலாளர் ஒருவரும், அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருந்த அவரது கணவரும் ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.
மேற்குறித்த இரண்டு ஊடகவியலாளர்களின் மூலமாக இசைப்பிரியா இராணுவ முகாமுக்குள் உயிருடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையின் இறுதிப்போர் நடந்ததன் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளில், இப்புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருப்பது தமிழ் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.