வாஷிங்டன், மே 27 – செல்பேசிகள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் சாம்சங் நிறுவனம், நவீன தொழில்நுட்பத்துடன் பல்வேறு வசதிகளைக் கொண்ட ‘வாட்ச் போன்கள்’ (Watch Phones) களை உருவாக்கி வருகின்றது.
தற்போது அந்த கருவிகளை எதிர்வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் வெளியிடலாம் என்றும் சாம்சங் நிறுவனம் முடிவு செய்துள்ளது என பிரபல ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிக்கை ஆருடம் கூறியுள்ளது.
இதற்கு முன் சாம்சங் நிறுவனம் ‘கேலக்ஸி கியர்’ (Galaxy Gear) திறன் கைக்கடிகாரங்களை அறிமுகப்படுத்தியது. இந்த கைக்கடிகாரங்களை திறன்பேசிகளுடன் இணைத்தே பயன்படுத்த முடியும். ஆனால், இந்த வாட்ச் போன்களைப் பயனர்கள், வேறு எந்த கருவிகளின் உதவியும் இன்றி தன்னிச்சையாக திறன்பேசிகள் போன்றே செயல்படுத்த முடியும்.
சாம்சங் டைசன் (Tizen) இயங்குதளங்களில் இயங்கக் கூடிய இந்த வாட்ச் போன்கள், அழைப்புகளை ஏற்பது, புதிய அழைப்புகளை ஏற்படுத்துதல் மட்டும் அல்லாது புகைப்படங்களை எடுத்தல், குறுந்தகவல்களை அனுப்புதல் மற்றும் இதயத் துடிப்பு கண்காணிப்பு (Heart Beat Monitor) போன்ற பல சிறப்பான அம்சங்களை உள்ளடக்கியுள்ளதாக் கூறப்படுகின்றது.
இந்த வாட்ச் போன்களை மக்களிடையே அறிமுகப்படுத்தும் நோக்குடன் சாம்சங் நிறுவனம், அமெரிக்கா, கொரியா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளின் முன்னணி விநியோகஸ்தர்களுடன் ஒப்பந்தங்களை ஏற்படுத்த முயன்று வருகின்றது.
சாம்சங்கைப் போன்றே ஆப்பிள், கூகுள் மற்றும் எல்ஜி நிறுவனங்களும் கைகளில் அணியும் வகையில் திறன்பேசிகளை இவ்வாண்டு அறிமுகப்படுத்த இருப்பது குறிப்பிடத்தக்கது .