சியோல் – உலக அளவில் கொவிட்-19 பாதிப்புகளுக்கு இடையிலும் ஸ்மார்ட்போன் எனப்படும் திறன்பேசிகளின் விற்பனையில் சாம்சுங் எலெக்ட்ரோனிக்ஸ் நிறுவனம் தொடர்ந்து தனது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
2020-ஆம் ஆண்டுக்கான முதல் காலாண்டில் (ஜனவரி-மார்ச் காலகட்டம்) தென்கொரிய நிறுவனமான சாம்சுங் 58.3 மில்லியன் திறன்பேசிகளை விற்பனை செய்துள்ளது. இது உலகின் மொத்த விற்பனையில் 21.2 விழுக்காடாகும்.
எனினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 19 விழுக்காடு வீழ்ச்சியாகும். இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டில் சாம்சுங் 71.8 மில்லியன் திறன்பேசிகளை விற்பனை செய்தது.
உலக அளவில் மொத்தம் 274 மில்லியன் திறன்பேசிகள் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் விற்பனை செய்யப்பட்டன. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 17 விழுக்காடு வீழ்ச்சியாகும்.
இந்த வீழ்ச்சிக்கான முக்கிய காரணங்களுள் ஒன்றாக கொவிட்-19 விவகாரம் பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் 3.2 மில்லியன் மக்கள் கொவிட்-19 பாதித்துள்ளது.
சீனாவின் வாவே நிறுவனம் (Huawei Technologies Co) உலக அளவில் இரண்டாவது நிலையில் 48.5 மில்லியன் திறன்பேசிகளை இந்த ஆண்டின் முதல் காலாண்டில் விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 18 விழுக்காடு வீழ்ச்சியாகும்.
இதே காலகட்டத்தில் அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் 39.2 மில்லியன் திறன்பேசிகளை விற்பனை செய்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 9 விழுக்காடு வீழ்ச்சியாகும்.
மொத்த அளவில் சாம்சுங்கின் திறன்பேசிகள் வணிகப் பிரிவு கடந்த ஓராண்டில் 91.6 பில்லியன் ரிங்கிட் விற்பனையைப் பதிவு செய்தது.