Home One Line P2 வாவே (Huawei) திறன்பேசிகளிலும் இனி செல்லியல் குறுஞ்செயலி பயன்படுத்தலாம்

வாவே (Huawei) திறன்பேசிகளிலும் இனி செல்லியல் குறுஞ்செயலி பயன்படுத்தலாம்

936
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மலேசியாவிலிருந்து கடந்த 2012 முதல் இயங்கிக் கொண்டிருக்கும் இணைய ஊடகம் செல்லியல். தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் திறன்பேசிகளில் (ஸ்மார்ட்போன்) வலம் வரும் ஒரே மலேசிய ஊடகம் செல்லியல்.

ஆப்பிள் ஐபோன்கள், கருவிகள் பயன்படுத்தும் “ஆப்ஸ்டோர்”, கூகுள் நிறுவனத்தின் அண்ட்ரோய்டு தொழில்நுட்பத்தைக் கொண்ட திறன்பேசிகளில் பயன்படுத்தப்படும் பிளேஸ்டோர் ஆகிய தளங்களின் வழியாக உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான பயனர்கள் செல்லியலைப் பயன்படுத்தி வருகின்றனர்.

எனினும், சீனாவின் வாவே (Huawei) திறன்பேசிகளில் “செல்லியல்” குறுஞ்செயலியைப் பதிவிறக்கம் செய்வதில் இடையூறுகள் ஏற்பட்டன என பல பயனர்கள் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

மலேசியாவில் வாவே செல்பேசிகள் மிக அதிக அளவில் விற்பனையாகின்றன.

அண்மையக் காலங்களில் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் தொடர்ந்து கொண்டிருக்கும் தொழில்நுட்ப-வணிகப் போர்களைத் தொடர்ந்து சீன தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அமெரிக்கத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது.

இந்தத் தடையைத் தொடர்ந்து அமெரிக்காவின் கூகுள் நிறுவனம் சீனாவின் வாவே திறன்பேசிகளில் கூகுள் தொழில்நுட்பங்கள் அனுமதிக்கப்படாது என அறிவித்தது.

அண்மையக் காலம் வரை கூகுள் பிளேஸ்டோரைப் பயன்படுத்தி வாவே திறன்பேசிகளில் செல்லியலைப் பதிவிறக்கம் செய்வதில் பிரச்சனைகள் எதனையும் பயனர்கள் சந்தித்ததில்லை.

கூகுள் அறிவிப்பைத் தொடர்ந்து வாவே திறன்பேசிகளில், கூகுள் பிளேஸ்டோர் தளத்தின் மூலம் செல்லியலைப் பதிவிறக்கம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டது.

இதைச் சரிசெய்யும் நோக்கில் இப்போது செல்லியல் வாவே திறன்பேசிகளில் பயன்படுத்தப்படும் “ஆப்காலரி” (AppGallery) என்னும் குறுஞ்செயலிகளுக்கான தளத்தில் செல்லியல் குறுஞ்செயலி நேரடியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, வாவே திறன்பேசிகளில் பயனர்கள் இனி நேரடியாக வாவே ஆப்காலரி தளத்தில் இருந்து செல்லியலைப் பதிவிறக்கம் செய்து படித்து மகிழலாம்.