Home One Line P2 33 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

33 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

845
0
SHARE
Ad

வாஷிங்டன் – அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வணிகப் போர் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில் கூடுதலாக 33 சீன நிறுவனங்களைக் கறுப்புப் பட்டியலில் சேர்த்து அவற்றின் மீது பொருளாதாரத் தடைகளையும் அமெரிக்கா விதித்துள்ளது.

மனித உரிமைகள் மீறல்களைக் காரணம் காட்டியும் பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதத் தயாரிப்புகள், இராணுவ நடவடிக்கைகள் ஆகியவை தொடர்பில் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அமெரிக்கா கடந்த வாரம் அறிவித்தது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் 9 நிறுவனங்களும், அமைப்புகளும் இந்தத் தடைகளை எதிர்நோக்கியுள்ளன. மனித உரிமை மீறல்களுடன், உய்கூர் இன மக்களுக்கும் மற்றவர்களுக்கும் எதிரான சீனாவின் அடக்குமுறைப் பிரச்சாரம், பெரிய எண்ணிக்கையிலானவர்களை கைது செய்து தடுத்து வைத்திருப்பது, கட்டாய உடல் உழைப்புத் தண்டனை, அதிநவீன தொழில்நுட்பத் திறனைக் கொண்டு கண்காணிப்பது போன்ற அம்சங்களுக்காகவும் இந்த நிறுவனங்கள் மீது தடைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

#TamilSchoolmychoice

சீனாவின் அதி நவீன தொழில்நுட்பத்தின் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டதற்காக ஏழு வணிக நிறுவனங்களை அமெரிக்கா தடை செய்திருக்கிறது.

மேலும் சீனாவின் இராணுவத்திற்கான தளவாடப் பொருட்களை தயாரித்து வழங்கிய 24 நிறுவனங்கள் மீதும் அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.

ஏற்கனவே இருநாடுகளுக்கும் இடையிலான வணிகப் போர் தீர்வு காணப்படாமல் நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களாக கொவிட்-19 பிரச்சனைகளாலும் இரு நாடுகளுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டன. கொவிட்-19 தொற்றுக்கு சீனாவே காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

தற்போது மேலும் 33 நிறுவனங்கள் மீதான இந்தத் தடையுத்தரவுகள் இருநாடுகளுக்கும் இடையிலான வணிக உடன்பாடுகளை மேலும் சிக்கலாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.