சிங்கப்பூர் – சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தனது ஹரி ராயா நோன்புப் பெருநாள் வாழ்த்துகளை மலேசியா உள்ளிட்ட குடியரசின் அண்டை நாடுகளின் தலைவர்களுக்கு தெரிவித்தார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
லீ மலேசியப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்கு தொலைபேசி அழைப்பின் மூலம் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டார்.
ஜோகூரின் ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார், புருணை சுல்தான் ஹசனல் போல்கியா மற்றும் இந்தோனிசிய அதிபர் ஜோகோ விடோடோ ஆகியோருக்கும் லீ தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
அண்டை நாட்டு தலைவர்களுடனான தனது நட்பை மீண்டும் பிரதமர் லீ உறுதிப்படுத்தியதாகவும் அவரது அலுவலகத்தின் பத்திரிக்கைக் குறிப்பு தெரிவித்தது.
கொவிட்-19 தொற்றுநோய் பாதிப்பு காலகட்டத்தில் மக்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாக்க அண்டை நாட்டு தலைவர்களுடன் இணைந்து பணியாற்றவும் லீ சியன் லூங் உறுதி கொண்டுள்ளார் என்றும் அந்தப் பத்திரிக்கை அறிக்கை தெரிவித்தது.
இதற்கிடையில் தனது முகநூல் மூலமாக, காணொளியின் வழி சிங்கை வாழ் முஸ்லீம் மக்களுக்கும் தனது ஹரிராயா நல்வாழ்த்துகளை லீ சியன் லூங் தெரிவித்துக் கொண்டார்.