புதுடில்லி : உத்தரப் பிரதேசத்தில் ஹத்ராஸ் என்ற வட்டாரத்தில் இளம் பெண் ஒருவர் கும்பல் ஒன்றினால் பாலியல் கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணைச் சந்திக்க ஊர்வலமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் இன்று வியாழக்கிழமை பிற்பகலில் (அக்டோபர் 1) டெல்லி-நொய்டா வட்டார எல்லைப் பகுதிக்குச் செல்ல முற்பட்டனர்.
அவர்களுடன் நூற்றுக் கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும் இணைந்து கொண்டனர்.
அப்போது அவர்களைத் தடுத்து நிறுத்த காவல் துறையின் முற்பட்டபோது கைகலப்புகள் நிகழ்ந்தன. காவல்துறையினரின் தடுப்புகளையும், உத்தரவுகளையும் மீறி ராகுல் காந்தி முன்னேறிச் சென்ற போது நடந்த கைகலப்பில் அவர் கீழே தரையில் தள்ளப்பட்டார்.
பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூற ராகுல் காந்தி நடைப்பயணமாக செல்ல முற்பட்டார். அதற்கு காவல் துறையினர் தடை விதித்தனர்.
ராகுல் காந்தி தரையில் தள்ளப்பட்ட காட்சிகளும் காணொலிகளும் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவத் தொடங்கியிருக்கின்றன.
ஹத்ராஸ் வட்டாரத்தில் 144 தடையுத்தரவு அமுலில் இருப்பதால் ராகுல் காந்திக்குத் தடை விதிக்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
தடையை மீறி நடந்து கொண்டதற்காகவும் காவல் துறையினரின் உத்தரவுகளை மீறியதற்காகவும் ராகுல் காந்தியும் பிரியங்காவும் பின்னர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் காவல் துறையினரால் கொண்டு செல்லப்பட்டு ஓய்வு விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளாத ஊடகங்கள் தெரிவித்தன.
நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
எதிர்க்கட்சிகள் காவல் துறையினரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
இதற்கிடையில், ராகுல் காந்தி காவல் துறையினரால் தள்ளிவிடப்படவில்லை. அவராகவே வேண்டுமென்றே கீழே விழுந்து அனுதாபத்தைத் தேட முயற்சி செய்கிறார் என்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன.