கோலாலம்பூர் : நேற்று புதன்கிழமை (செப்டம்பர் 30) நடைபெற்ற சிலாங்கூர் மாநில மஇகா பேராளர் மாநாட்டில் உரையாற்றிய மஇகா தேசியத்தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் விரைவில் எதிர்பார்க்கப்படும் 15ஆவது பொதுத் தேர்தலுக்குத் தயாராகும்படி மஇகாவினரைக் கேட்டுக் கொண்டார்.
இப்போதிருக்கும் அரசியல் சூழலில் எந்தக் கட்சி என்ன முடிவெடுக்கும் என்று கூறமுடியாது என்பதால், எந்த நேரத்திலும் பொதுத் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்றும் குறிப்பாக சிலாங்கூர் மஇகாவினருக்கு விக்னேஸ்வரன் நினைவுறுத்தினார்.
எனவே, பொதுத் தேர்தலுக்குத் தயாராகும் நோக்கில் கட்சி தேர்தல் பணியாளர்களுக்கான சிறப்பு பயிற்சிகளை வழங்க மாநில மஇகா மற்றும் தொகுதிகள் உடனடியாகச் செயல்பட வேண்டுமென விக்னேஸ்வரன் உத்தரவிட்டார். அத்தகைய பயிற்சிகளுக்கான செலவினங்களையும் மஇகா தலைமையகம் ஏற்றுக் கொள்ளும் என்றும் விக்னேஸ்வரன் தனது உரையில் அறிவித்தார்.
மஇகா சட்டவிதிகளில் திருத்தம் செய்யப்படலாம்
மஇகா சட்டவிதிகளில் மீண்டும் திருத்தப்படலாம் எனவும் இது குறித்துத் தான் துணைத் தலைவர் சரவணனோடு கலந்தாலோசித்திருப்பதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
தற்போது ஒரு கிளையில் 60 உறுப்பினர்கள் குறைந்த பட்ச இருக்க வேண்டும், கூடுதலாக எத்தனை உறுப்பினர்கள் இருந்தாலும் அதற்காக அந்தக் கிளையின் பேராளர்கள் எண்ணிக்கை உயர்த்தப்படாது என மஇகா சட்டவிதிகள் குறிப்பிடுகின்றன.
இதனை மாற்றியமைத்து தொகுதிகளின் வழியாக மீண்டும் பேராளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையைக் கொண்டுவர தான் ஆலோசிப்பதாகவும் இதன் மூலம் கூடுதலாக உறுப்பினர்களை கிளைகள் சேர்க்கும் ஆர்வம் அவர்களுக்கு ஏற்படும் எனக் கருதுவதாகவும் விக்னேஸ்வரன் கூறினார்.
மஇகா கிளைக்கு வாழ்த்துச் செய்தி வழங்கிய துங்கு அப்துல் ரஹ்மான்
1960-ஆம் ஆண்டுகளில் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள மஇகா கோல லங்காட் கிளையின் ஆண்டுக் கூட்டத்திற்கு அப்போதைய பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் வாழ்த்து செய்தியை வழங்கியிருந்தார் என்ற சுவாரசியமான செய்தியையும் பேராளர்களுக்கு விக்னேஸ்வரன் தனதுரையில் நினைவுபடுத்தினார்.
அந்தச் செய்தியில் சுமார் 7 ஆயிரம் இந்தியர்களுக்கு மலேசியக் குடியுரிமை பெற்றுத் தருவதில் பெரும்பணி ஆற்றிய அந்தக் கிளைக்கு துங்கு அப்துல் ரஹ்மான் நன்றி தெரிவித்திருந்தார்.
அந்தக் காலத்தில் அவ்வாறான மக்களுடனான தொடர்புகளை மஇகா கிளைகள் கொண்டிருந்ததால்தான் மஇகா இன்றுவரையில் இத்தனை வலுவுள்ள கட்சியாகத் திகழ முடிகிறது என்றும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
எனவே, மஇகா கிளைகள் மீண்டும் மக்கள் களத்திற்கு சென்று மக்களுடனான குறிப்பாக இந்திய சமூகத்தினருடனான தொடர்புகளை அதிகரிக்க வேண்டும், மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டுமென விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.