நாகபுரி, பிப்.18- அடுத்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தாம் பிரதமராவதற்கு மாயாவதி (படம்) விருப்பம் தெரிவித்திருக்கிறார்.
மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது தொண்டர்களிடையே பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் பேசியதன் விவரம்:-
“அடுத்த மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி மிகப் பெரிய வெற்றியடைவதை தொண்டர்கள் உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் செங்கோட்டையிலிருந்து நான் சுதந்திர தின உரையாற்ற முடியும்.
பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். உங்களைக் கெடுக்க சில சக்திகள் முயற்சி செய்யும். ஆனால் நீங்கள் விலைபொருள் ஆகிவிடக் கூடாது.
நான் உத்தர பிரதேச முதல்வராக இருந்தபோது பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் அதை ரத்து செய்தது. இதை எதிர்த்து காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.
காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளிடமிருந்து சமதூரத்தில் இருக்க வேண்டும் என்ற கொள்கையை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.
மத்தியில் நமது கட்சி ஆட்சிக்கு வந்தால், அம்பேத்கருக்கும் ஜோதிராவ் புலேவுக்கும் மகாராஷ்டிரத்தில் நினைவுமண்டபங்களும் அருங்காட்சியகங்களும் அமைக்கப்படும். பஞ்சாப் மாநிலத்தில் கான்ஷிராமுக்கு நினைவகம் எழுப்பப்படும்”
மேலும் பேசிய மாயாவதி, ஆந்திரத்தைப் பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்குவதற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து தனி விதர்பா மாநிலம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைக்கும் அவர் தனது ஆதரவைத் தெரிவித்துப் பேசினார்.
மேலும் உணவுப் பொருள்களுக்கு நேரடி மானியம் வழங்கும் திட்டம் ஏழைகளுக்கு எந்த விதத்திலும் உதவாது என்று அவர் கூறினார்.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கு தமது எதிர்ப்பைத் தெரிவித்த அவர், பரவலாக அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் மேம்பாட்டுத் திட்டங்களை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்றார்.