ஹாங்காங், பிப். 18- ஆஸ்திரேலிய கோடீஸ்வரர் தயாரிக்கவுள்ள, புதிய, “டைட்டானிக்’ கப்பலில் பயணிக்க, உலகமெங்கும் உள்ள பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
உலகின் மிகப்பெரிய கப்பல் என்ற பெருமையுடன், 1912ல், தன் பயணத்தை தொடங்கிய, “ஆர்.எம்.எஸ் டைட்டானிக்’ கப்பல், வட அட்லாண்டிக் கடல் பகுதியில், பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளாகி, மூழ்கியது.
இது தொடர்பாக, வெளிவந்த, “டைட்டானிக்’ திரைப்படமும், மக்களிடையே, இக்கப்பல் பற்றிய ஆர்வத்தை அதிகரித்தது.
இப்போது, அதே பெயரில், அதே தோற்றத்துடன், புதிய கப்பலை உருவாக்க, ஆஸ்திரேலியாவை சேர்ந்த கோடீஸ்வரர், கிளைவ் பால்மர் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக அவர், சீனாவில் உள்ள, சி.எஸ்.சி ஜின்லிங் என்ற நிறுவனத்துடன், ஒப்பந்தம் செய்துள்ளார்.
ஒரிஜினல், “டைட்டானிக்’ கப்பல் போன்ற தோற்றத்துடனும், நவீன வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும், இந்த கப்பல் தயாரிக்கப்படவுள்ளது.
கப்பல் தயாரிப்பு பணிகள், இன்னும் துவங்காத நிலையில், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்தவர்கள், இந்த கப்பலில் பயணிக்க ஆர்வத்துடன் உள்ளனர்.
இதற்காக, ஐந்து கோடி ரூபாயை தர, பயணிகள் சிலர் முன்வந்துள்ளதாக, கிளைவ் பால்மரின், உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர்.