Home கலை உலகம் பிரபல இயக்குனர் இராமநாராயணன் காலமானார்!

பிரபல இயக்குனர் இராமநாராயணன் காலமானார்!

682
0
SHARE
Ad

ramanarayanசென்னை, ஜூன் 23 – உலகளவில் அதிக படங்களை இயக்கி சாதனை படைத்த தமிழ் பட இயக்குநர் இராம நாராயணன் (67), உடல்நலக்குறைவால் காலமானார். சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்த அவர், கடந்த 10 நாட்களுக்கு முன்னர் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று (ஜூன் 22ம் தேதி) இரவு 9.30 மணியளவில் காலமானார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பிறந்தவர் இராம நாராயணன். சினிமா மீது கொண்ட காதலால் சென்னைக்கு வந்தார், தனது நண்பரான கஜாவுடன் சேர்ந்து கதை, வசனங்களை எழுதி வந்தவர், முதன்முதலாக ஆசை அறுபது நாள் என்ற படத்திற்காக கதை, திரைக்கதை, வசனம் எழுதினார். பின்னர் மீனாட்சி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அவதரித்தார். தொடர்ந்து பல படங்களை இயக்கி 1980-90-களில் முன்னணி இயக்குநராக வலம் வந்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, குஜராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 126 படங்கள் இயக்கி, உலகளவில் அதிக படங்களை இயக்கிய இயக்குநர் என்ற சாதனையும் படைத்துள்ளார். கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு ஆர்யா சூர்யா என்ற படத்தை இயக்கினார்.

#TamilSchoolmychoice

பொதுவாக ராம நாராயணன் படங்கள் என்றாலே வரைவியல் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது, அதிலும் விலங்குகளை வைத்து படங்கள் எடுப்பதில் கைதேர்ந்தவர். அதுமட்டுமின்றி ஆன்மிகம் தொடர்பாக ஏராளமான சாமி படங்களை இயக்கியுள்ளார். ஈஸ்வரி, ஆடி விரதம், சிவசங்கரி, சிவராத்திரி, மாயா, ராஜகாளியம்மன், பாளையத்து அம்மன், கோட்டை மாரியம்மன் என பல படங்களை சொல்லலாம்.

இயக்குநராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இருந்த இராம நாராயணன், திமுக., தலைவர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். 1989-ம் ஆண்டு காரைக்குடி தொகுதியில் எம்.எல்.ஏ.-வாகவும் இருந்துள்ளார். இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பதவி வகித்தவர். திரையுலகில் இவரது சேவையை பாராட்டி தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்துள்ளது.

மறைந்த இராம நாராயணனின் உடல் சிங்கப்பூரில் இருந்து இன்று மதியம் 1.30 மணியளவில் சென்னை கொண்டு வரப்பட இருக்கிறது. பின்னர் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிச்சடங்கு ஜூன் 24-ம் தேதி செவ்வாய் கிழமை அன்று நடைபெறும் என்று கூறப்படுகின்றது.