ரியாத், பிப். 20- இஸ்லாமிய ஷரியத் சட்டங்களை கடுமையாக பின்பற்றும் சவூதி அரேபியாவில் மன்னர் அப்துல்லா தலைமையிலான முடியாட்சி நடந்து வருகிறது.
முடியாட்சி முறையில் இருக்கும் சவூதி அரேபியாவின் ஆட்சி முறையை சிறுக, சிறுக ஜனநாயகப் பாதைக்கு திருப்ப மன்னர் அப்துல்லா முடிவு செய்தார்.
இதனையடுத்து, கடந்த 2005ம் ஆண்டு அந்நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்பட்டது. எனினும், பெண்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டது.
இதிலும், சீர்திருத்தத்தை ஏற்படுத்த விரும்பிய மன்னர் அப்துல்லா, கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெண்களும் வாக்களிக்க வகை செய்யும் சட்டத்தை இயற்றினார். வரும் 2015ம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் வேட்பாளர்களாகவும் போட்டியிட அவர் அனுமதியளித்துள்ளார்.
மன்னரின் ஆட்சி முறை குறித்து ஆலோசனை கூற ‘ஷுரா’ என்ற குழு இயங்கி வருகிறது. இந்த குழுவிற்கு கடந்த மாதம் 11ம் தேதி புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 160 உறுப்பினர்கள் கொண்ட இந்த ஆலோசனை குழுவில் சவூதியின் இரு இளவரசிகள், கல்வியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என 30 பெண்களை முதன்முறையாக மன்னர் அப்துல்லா நியமித்தார்.
புதிய ஷுரா குழுவினரின் பதவியேற்பு நிகழ்ச்சி நேற்று ரியாத்தில் உள்ள மன்னர் அரண்மனையில் நடைபெற்றது. மன்னர் அப்துல்லா முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 130 ஆண் ஆலோசகர்கள் பதவியேற்றுக் கொண்ட அதே அறையில் 30 புதிய பெண் உறுப்பினர்களும் பதவியேற்றனர்.
சவூதி அரேபியாவில் பெண்ணுரிமை தொடர்பான மேம்பாட்டில் இது முதல் படி என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து கூறுகின்றனர்.