இஸ்லாமாபாத், பிப். 21- பாகிஸ்தானின், குவாடர் துறைமுகத்தின் நிர்வாகப் பொறுப்பு, சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின், குவாடர் துறைமுகம், கராச்சி அருகே, பாரசீக வளைகுடா பகுதியில் அமைந்துள்ளது.
இந்த ஆழ்கடல் துறைமுகத்தின் நிர்வாக பொறுப்பு, சிங்கப்பூரிடம் இருந்தது.
தற்போது, இதன், நிர்வாக பொறுப்பு, சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம், 18ம்தேதி கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, துறைமுகம் பாகிஸ்தானிடம் இருந்தாலும், பலனடைவது சீனாதான்.
இது குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி குறிப்பிடுகையில், “இந்தத் துறைமுகப் பொறுப்பு, சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது கவலைக்குரியது.
இத்துறைமுகம் கட்டி முடிக்கப்பட்ட பின், அரபிக் கடல் பகுதியில், சீனக் கப்பல் போக்குவரத்து அதிகரிக்கும் பட்சத்தில், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்,” என்றார்.
பாகிஸ்தானில் இருந்து மேற்கு சீனா வரையிலான, கடல்சார் வியாபார தளமாகவும், இந்தத் துறைமுகம் இருக்கும்.
இத்துறைமுகக் கட்டுமானப் பணியில், சீனா, 75 சதவீதம் முதலீடு செய்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான, இலங்கையின் ஹம்பன்தோட்டாவிலும், வங்கதேசத்தின் சிட்டகாங்கிலும், துறைமுகங்களைக் கட்டுவதற்கு, சீனா உதவுகிறது. தற்போது குவாடர் துறைமுக நிர்வாக பொறுப்பிலும் சீனா கால்பதித்துள்ளது.