கோலாலம்பூர், செப்டம்பர் 10 – பயனீட்டாளர்கள் தங்களின் கைக்கெடிகாரம் போன்ற அணிகலன்களில் அண்ட்ரோய்ட் இயங்குதளங்களை இணைக்கும் தொழில் நுட்பத்தை கடந்த ஜூன் மாதம் நடந்த தனது மாநாட்டில் கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது.
இதன் முதல்கட்ட கைக்கெடிகாரங்களை சாம்சுங் மற்றும் எல்ஜி நிறுவனங்கள் வடிவமைத்து சந்தையில் வெளியிட்டுள்ளன.
கடந்த வாரத்தில் மோட்டோரோலா நிறுவனமும் தனது வடிவமைப்பில் உருவாக்கிய கைக்கெடிகாரத்தை அறிமுகப்படுத்தியது. அண்ட்ரோய்ட் இயங்குதளத்தில் இயங்கும் மிகச் சிறந்த உச்சகட்ட தொழில் நுட்ப படைப்பாக அமைந்திருக்கின்றது என மோட்டோரோலாவின் கைக்கெடிகாரம் பயனீட்டாளர்களிடையே பாராட்டுகளை குவித்து வருகின்றது.
சாம்சுங் நிறுவனம் அறிமுகப்படுத்திய அண்ட்ரோய்ட் இயங்குதள கைக்கெடிகாரத்தினை செல்லினம், செல்லியல் தளங்களின் வடிவமைப்பாளர் முத்து நெடுமாறன் முதன் முதலாக பரிசோதனை செய்து பார்த்த அனுபவத்தை விவரித்துள்ளார்.
“1337 வென்சர்ஸ்” (1337 Ventures) என்ற மலேசிய நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மைக் ஸ்மித் இந்த சாம்சுங் கைக்கெடிகாரத்தை அணிந்திருக்கும்போது, அந்த கைக்கெடிகாரத்தினுள் தமிழ் மொழியைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் பரிசோதனை முயற்சியை மேற்கொண்டதாக முத்து நெடுமாறன் தெரிவித்தார்.
1337 வென்சர்ஸ் என்பது தொடக்க நிலையில் உள்ள தொழில் நுட்ப நிறுவனங்களில் முதலீடுகளை மேற்கொள்ளும் ஒரு மலேசிய முதலீட்டு நிறுவனமாகும்.
முத்து நெடுமாறன் தான் பயன்படுத்தும் ஐபோனில் உள்ள தமிழ் எழுத்துருக்களைப் பயன்படுத்தி ஒரு குறுஞ்செய்தியை உருவாக்கி 1337 வென்சர்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மைக் ஸ்மித் பயன்படுத்தும் கைத்தொலைபேசி எண்ணுக்கு அனுப்பினார்.
மைக் ஸ்மித் கட்டியிருந்த சாம்சுங் கைக்கெடிகாரத்தில் அந்த செய்தி பின்வருமாறு திரையில் தெரிந்தது:-
இதனைக கண்டதும், ஐபோன் மற்றும் அண்ட்ரோய்ட் இயங்குதளங்களில் இயங்கும் கையடக்கக் கருவிகளின் தொழில் நுட்பத்திற்குள் தமிழின் பயன்பாட்டைக் கொண்டுவர முத்து நெடுமாறன் மேற்கொண்டு வரும் முயற்சிகளை வெகுவாகப் பாராட்டிய மைக் ஸ்மித் –
“தொழில்நுட்ப ரீதியாக அறிமுகப்படுத்தப்படும் கையடக்கக் கருவிகளில் புதைந்துள்ள வாய்ப்புக்களை உடனுக்குடன் கண்டறிந்து பயன்படுத்திக் கொள்ளும் ஒரு மலேசிய தொழில் நுட்ப மேம்பாட்டாளரைச் சந்தித்ததில் பெருமிதம் கொள்கின்றேன். அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆப்பிள் நிறுவனத்தின் உலக தொழில்நுட்ப மேம்பாட்டாளர்கள் மாநாட்டில் தனது சொந்த முயற்சியில் கலந்து கொண்டு அதன் மூலம் பெறுகின்ற அறிவாற்றலை ஆக்ககரமான வழிகளில் மக்களுக்குப் பயன்படும் விதத்தில் தொழில்நுட்ப செயல்பாட்டுக்குக் கொண்டுவரும் அவரது முயற்சிகள் தொடரவும், தொடர்ந்து வெற்றி பெறவும் வாழ்த்துகின்றேன்” என்று கூறியுள்ளார்.
“அவரைப் போன்றவர்கள், அவரது வழித் தடத்தில் நடப்பவர்கள் இன்னும் கூடுதலாக இருக்க வேண்டும் என விரும்புகின்றேன்” என்றும் மைக் ஸ்மித் மேலும் கூறியுள்ளார்.
அண்ட்ரோய்ட் இயங்குதளங்களில் இயங்கும் கைக்கெடிகாரங்கள் இன்னும் மலேசியாவில் விற்பனைக்கு வரவில்லை.
இதற்கிடையில் நேற்று ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் வாட்ச் என்ற கைக்கெடிகாரம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆக, கையடக்கக் கருவிகளுக்குள் ஏற்கனவே வந்துவிட்ட தமிழ் மொழி, இப்போது நவீன கைக்கெடிகாரங்களுக்குள்ளும் வந்துவிட்டது!