Home Featured தொழில் நுட்பம் “அணிகலன்கள் காட்டும் அழகு தமிழ்!” – முத்து நெடுமாறன்

“அணிகலன்கள் காட்டும் அழகு தமிழ்!” – முத்து நெடுமாறன்

1057
0
SHARE
Ad

கோலாலம்பூர் – (‘செல்லினம்’ குறுஞ்செயலி மற்றும் ‘முரசு அஞ்சல்’ மென்பொருளின் உருவாக்குநரும், வடிவமைப்பாளருமான, முத்து நெடுமாறன் நவீன திறன் கடிகாரங்களில் தமிழ் இடம் பெற்றுள்ளது குறித்து பதிவு செய்த கருத்துகள் அடங்கிய இந்தக் கட்டுரை அண்மையில் செல்லினம் குறுஞ்செயலி தளத்தில் இடம் பெற்றிருந்தது. அதனை  செல்லியல் வாசகர்களுக்காக இங்கே மறு-பதிவேற்றம் செய்வதில் மகிழ்ச்சியடைகின்றோம். முத்து நெடுமாறன் செல்லியலின் தொழில்நுட்ப வடிவமைப்பாளரும் ஆவார்) 

AppleWatch“தொலைபேசுவதற்கும் குறுஞ்செய்திகளை அனுப்புவதற்கும் மட்டுமே அதிகம் பயன் படுத்தப்பட்டு வந்த செல்பேசிகள், திறன்பேசிகளாக உருவெடுத்தப் பிறகு, பலவிதமான கருவிகளின் வேலைகளை ஒரே கருவிக்குள் அடக்கும் முயற்சிகள் தொடருந்து நடைபெற்று வருகின்றன.  சில இடங்களில், இந்த முயற்சிகள், சிறப்பான வெற்றியையும் கண்டுள்ளன.

நிழற்படக் கருவி (காமிரா),  நிகழ்படக் கருவி (விடியோ காமிரா), நாட்குறிப்பு (டைரி), நாள்காட்டி (காலெண்டர்), திசைகாட்டி (காம்பஸ்), குறிப்பேடு (நோட்டு புத்தகம்), கைவிளக்கு (டார்ச்சுலைட்டு), புவிநிலை வழிகாட்டி (GPS navigation device),  குரல் ஒலிப்பதிவுக் கருவி (voice recorder) போன்றவை சில எடுத்துக் காட்டுகளே. இந்தக் கருவிகளின் வேலையை கைப்பேசிகள் செய்யத் தொடங்கியது முதல் அந்தந்தக் கருவிகளுக்கானச் சந்தைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எடுத்துக் காட்டாக, கடைநிலை நிழற்படக் கருவிகளின் (low end cameras) விற்பனை விரிவாக்கம் கையடக்கக் கருவிகளில் உள்ள காமிராக்களினால் பின்னடைவுகளைச் சந்தித்துள்ளதைத் தெளிவாகவே காணலாம்.muthu-nedumaran

#TamilSchoolmychoice

முத்து நெடுமாறன்

அடுத்தக்கட்ட மேம்பாடுகள், கடனட்டைகளின் (credit cards) வேலைகளையும் கையடக்கக் கருவிகளுக்குள் கொண்டு வருகின்றன. வருங்காலங்களில் கடனட்டை என்று தனி ஒரு அட்டை இருக்குமா என்ற ஐயம் கூடத் தோன்றுகின்றது. அதே வேளையில், இன்று கையடக்கக் கருவிகள் இல்லாமல் நாம் பெற்றுவரும் சில வசதிகள், எதிர்காலத்தில் அவ்வாறே இருக்குமா என்ற அச்சமும் தோன்றுகிறது.

இந்தத் தொழில்நுட்ப ஒருங்கிணைப்புகள் கையடக்கக் கருவிகளில்தான் நடக்கின்றன என்று நாம் எண்ணிக்கொண்டு இருக்கும் வேளையில் புதுப் புதுத் துணைக்கருவிகள் தோன்றியவாறே இருக்கின்றன. சிறுசிறு வேலைகளைச் செய்யும் இந்தக் கருவிகளின் செயல்களை ஒருங்கிணைக்கும் கட்டமைப்பையே ‘பொருட்களின் இணையம்’ (Internet of Things அல்லது IoT) என்று அழைக்கிறார்கள்.

இந்த வரிசையில் ஓரிரு ஆண்டுகளுக்குமுன் வெளிவந்தக் கருவிகளை ‘அணிகலன்கள்’ (wearables) என்று அழைத்தார்கள். அதில் அதிகம் பேசப்பட்டு வருவது திறன்கடிகாரங்கள் (smart watches). கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் – இந்த மூன்று பெரிய நிறுவனங்களும் கையில் அணியும் இந்தக் கருவிகளை வெளியிட்டுள்ளனர். மைக்ரோசாப்ட் வெளியிட்டக் கருவியை ‘கடிகாரம்’ என்று அழைக்கவில்லை. ‘கைக்கட்டு’ எனும் பொருளைக் குறிக்கும் ‘பேண்டு’ (band) என்று அழைக்கிறார்கள்.

ஆப்பிள் திறன்கடிகாரமும் ஆண்டிராய்டு இயக்கத்தில் செயல்படும் திறன்கடிகாரங்களும் வெளிவந்துவிட்ட போதிலும் அவற்றின் விற்பனை எந்த அளவுக்கு வழிவழியே வந்த கைக்கடிகாரச் சந்தையை பாதிக்கும் என்பதைத் தெளிவாகக் காண முடியவில்லை. நேரத்தைக் காட்டுவதைத் தவிர்த்து, இந்தத் திறன் கடிகாரங்கள் கூடுதலாகத் தரப் போகும் வசதியை வைத்தே இதன் வெற்றி அடங்கியுள்ளது என்பது பலருடைய கருத்து. அந்தக் கூடுதல் வசதியைத் தரும் திறன்கடிகாரச் செயலிகள் (smart watch apps) பெருமளவு மக்களின் பார்வையை ஈர்க்கும் அளவுக்கு இன்னும் வரவில்லை. ஆப்பிள் நிறுவனம் இதுவரை அவர்களின் திறன் கடிகாரங்களின் அழகையே முன்னிறுத்தி விற்பனை விரிவாக்கங்களை நடத்தி வருகின்றனர்.

எப்படி திறன்பேசிகள் (smart phones) தொலைபேசும் செயலுக்கு அப்பால் பல மிகப் பெரிய செயல்களைச் செய்கின்றனவோ, அதுபோல திறன்கடிகாரங்களும் நேரம் காட்டும் செயல்களுக்கு அப்பால் பல பெரிய செயல்கலைச் செய்யும் காலம் மிகவும் விரைவில் வரும் என்று எதிர்பார்ப்போம்!

எது எப்படி இருப்பினும், புதுப்புதுக் கருவிகள் தோன்றிக் கொண்டே இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. எங்கள் எண்ணமெல்லாம் அந்தக் கருவிகள் ஒவ்வொன்றிலும் தமிழ் மொழி தடையின்றி இயங்கவேண்டும் என்பதே. ஆப்பிள், ஆண்டிராய்டு திறகடிகாரங்கள் இரண்டிலும் தமிழ் எழுத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளதைக் கண்டபோது பூரிப்படைந்தோம். இந்தப் பூரிப்பை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், இந்த இரண்டு கடிகாரங்களிலும் தமிழ் எழுத்துகள் தோன்றும் படங்களைக் கீழே தருகின்றோம்.

ஆப்பிள் திறன்கடிகாரத்தில் உள்ள தமிழ் எழுத்துரு, நாங்கள் உருவாக்கிய ‘இணைமதி’ என்று கூறிக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்!

Apple-watch-tamil-wording

ஆப்பிள் வாட்சில் ‘இணைமதி’ எழுத்துருவில் தோன்றும் ஒரு தமிழ்க் குறுஞ்செய்தி.

Android-Watch-Tamil

ஆண்டிராய்டு திறன்கடிகாரம் ஒன்றில் தோன்றும் ஒரு தமிழ்க் குறுஞ்செய்தி. 

திறன்கடிகாரங்களில் நீங்கள் எதிர்பார்க்கும் செயல்கள் எவை என்பதை, கீழே தோன்றும் கருத்துகள் பகுதியில் கொஞ்சம் சொல்லுங்களேன்.

-முத்து நெடுமாறன்