அகமதாபாத், செப்டம்பர் 18 – இந்தியாவுக்கு வருகை தந்துள்ள சீனா அதிபர் ஜின்பிங்கை பிரதமர் மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று சந்தித்துப் பேசினார். பின்னர் இரு தலைவர்கள் முன்னிலையில் சீனா – குஜராத் இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
சீனா அதிபர் ஜின்பிங் இந்தியாவில் 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இலங்கை சென்றிருந்த அவர் கொழும்பிலிருந்து, இன்று குஜராத் மாநிலம், அகமதாபாத் வந்தடைந்தார். அவருடன் அவரது மனைவி பெங் லியுயான் மற்றும் உயர் நிலைக் குழுவினரும் வருகை தந்துள்ளனர்.
சீன அதிபரை மாநில ஆளுநர் ஓ.பி.கோலி, முதல்வர் ஆனந்தி பென் படேல், வெளியுறவுத் துறை செயலாளர் சுஜாதா சிங் மற்றும் குஜராத் அமைச்சர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
இந்த வரவேற்புக்கு பின்னர் சீனா அதிபர் ஜின்பிங், நேராக வஸ்திராபூர் ஹயாத் உணவகம் சென்றார். அங்கு அவரை பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சியுடன் வரவேற்றுப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இவை குவாங்டாங் மாநிலத்திற்கும் குஜராத் மாநில அரசுக்கும் இடையேயும், குவாங்ஜவ் நகருக்கும், அகமதாபாத் மாநகராட்சிக்கு இடையேயும் கையெழுத்திடப்பட்டன. மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தம், குஜராத்தில் தொழில் பூங்காக்கள் அமைப்பது தொடர்பாக கையெழுத்திடப்பட்டது.
இதைத் தொடர்ந்து மகாத்மா காந்தி- கஸ்தூரிபா தம்பதியர் பல்லாண்டு காலம் வாழ்ந்த சபர்மதி ஆசிரமத்துக்கு ஜின்பிங் சென்றார். அவருடன் பிரதமர் மோடியும் சென்றார்.
சபர்மதி ஆசிரமம் குறித்து ஜின்பிங்குக்கு மோடி விவரித்தார். பின் மோடியும், சீனா அதிபர் ஜின்பிங்கும் டெல்லி செல்கின்றனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்: EPA