கோலாலம்பூர், செப்டம்பர் 18 – பிரிட்டிஷ் ஏர்வேஸ் வரும் 2015-ம் ஆண்டு முதல் கோலாலம்பூரில் இருந்து லண்டன் நகருக்கான நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த 2001-ம் ஆண்டு முதல் கோலாலம்பூரில் இருந்து லண்டனுக்கான நேரடி விமான சேவையை நிறுத்தியது.
இதற்கு முக்கிய காரணம், அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ம் தேதி அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டதால், உலக அளவில் விமான போக்குவரத்தின் வர்த்தகம் மிகவும் பாதிக்கப்பட்டது. அதன் காரணமாக கோலாலம்பூர்-லண்டன் இடையிலான நேரடிச் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது அதனை எதிர்வரும் 2015-ம் ஆண்டு மே மாதம் 27-ம் தேதி முதல் தொடங்க இருப்பதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனத்தின் ஆசிய பகுதிக்கான பொது மேலாளர் ஜேமி கேஸ்சிடி கூறுகையில், “மலேசியாவிற்கான விமான சேவையை மீண்டும் தொடங்குவதற்கு எங்கள் நிறுவனம் நீண்ட காலமாக முயற்சிகள் எடுத்து வந்தது. எனினும், தற்போது தான் அதற்கான வாய்ப்புகள் மிகச் சரியாக அமைந்துள்ளன. ”
“பெரிய முதலீட்டில், புதிய பாதையை வகுப்பது சாத்தியமான ஒன்று தான். எனினும், அதற்கான பலன் என்ன என்பதை ஆராய வேண்டும்.”
“மலேசிய விமான நிலையத்தில் எங்கள் நிறுவன விமானங்களை இயக்குவது மிக எளிதான ஒன்று” என்று கூறியுள்ளார்.
கோலாலம்பூர்-லண்டன் இடையிலான விமான சீட்டுகளின் விற்பனை நேற்று முதல் தொடங்கியது. பயணர்களின் இரு வழி போக்குவரத்திற்கான கட்டணங்கள்:
‘சிக்கன வகுப்பு’ (economy class)- ற்கு 3696 ரிங்கெட்டுகளும், பிரீமியம் சிக்கன வகுப்பிற்கு 15,264 ரிங்கெட்டுகளும், ‘வியாபார வகுப்பு’ (Business Class)- ற்கு 29,658 ரிங்கெட்டுகளும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.
.