கோலாலம்பூர் : பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் விமான நிறுவனம் தான் சேகரித்து வைத்திருக்கும் அரிய கலைப் பொருட்களை விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் ரொக்கத்தைக் கொண்டு தனது வருமானத்தை பெருக்குகிறது.
உலகம் முழுவதும் விமான நிறுவனங்கள் தங்களின் இழப்புகளை சரிசெய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சில நிறுவனங்களுக்கு அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் நிதி உதவிகள் செய்கின்றன.
மலேசிய விமான நிறுவனமான மாஸ் அரசாங்கத்திடமிருந்து 5 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டைப் பெறவிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் ஒரு புதுமையான வழிமுறையைக் கண்டறிந்துள்ளது.
தன்வசமுள்ள அரிய ஓவியக் கலைப் பொருட்களை பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் விற்பனை செய்ய முன்வந்துள்ளது. இதன் ஒரே ஓவியம் 1 மில்லியன் அமெரிக்க டாலரை ஈட்டும் அளவுக்கு பெருமை வாய்ந்தது என செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுபோன்று சுமார் 10 ஓவியங்கள் விற்பனைக்காக அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.
கொவிட்-19 பாதிப்பால் விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான வேலை இழப்புகள் பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்டிருக்கின்றன.
பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான அலெக்ஸ் குருஸ், போதிய ரொக்கக் கையிருப்பு இன்றி தாங்கள் தவிப்பதாகக் கூறியிருந்தார். மிகப் பெரிய அளவில் வணிகக் கட்டமைப்பு மாற்றியமைக்காவிட்டால் பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் தொடர்ந்து நிலைத்திருப்பது கடினம் எனவும் அவர் எச்சரித்திருந்தார்.
எனவே, ரொக்கக் கையிருப்பை அதிகரிப்பதற்காக தனது கலைப் பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்ய பிரபல அனைத்துலக ஏல விற்பனை நிறுவனமான சோத்பிஸ் (Sotheby’s) ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.