புது டெல்லி – எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து அனைத்துலக விமான நிறுவனங்கள், இந்திய சந்தைகளை குறி வைத்து பல்வேறு சலுகைகளை அறிவித்து தங்களது இடங்களைத் தக்க வைக்க முயற்சித்து வருகின்றன.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும், உலகின் முக்கிய விமான நிறுவனங்களான கத்தார், எமிரேட்ஸ், எத்திகாட், பிரிட்டிஷ் ஏர்வேஸ், ஜெட் மற்றும் ஏர் இந்தியா போன்ற நிறுவனங்கள் பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளன. இது தொடர்பாக யாத்ரா நிறுவனத்தில் வெளியாகி உள்ள அறிவிப்பில், டெல்லி – நியூயார்க்கிற்கு பிரிட்டிஷ் ஏர்வேசின் திரும்பக் கட்டணம் (Return Ticket) மட்டும் 88,000 ரூபாயில் இருந்து 64,000 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அதே வழித்தடத்திற்கு, கத்தார் ஏர்வேஸ் 54,000 ரூபாயை கட்டணமாக நிர்ணயித்துள்ளது. எத்திகாட் நிறுவனம், லண்டன்-டெல்லி வழித்தடத்திற்கு 41,000 ரூபாய் கட்டணத்திலிருந்து 29,000 ரூபாயாகக் குறைத்துக் கொண்டுள்ளது.
எமிரேட்ஸ் நிறுவனத்தைப் பொருத்தவரை இந்தியாவில் இருந்து ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு முறையே 34,000, 52,550 மற்றும் 19,000 ரூபாயை ஒரு வழிக் கட்டணமாக அறிவித்துள்ளது.
எண்ணெய் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி தான் இந்த சலுகை அறிவிப்புகளுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து மட்டுமல்லாமல் பன்னாட்டுப் போக்குவரத்தும் பெருகி வரும் நிலையில், விமான நிறுவனங்களின் இந்த அறிவிப்பு, இந்தியாவில் மேலும் விமானப் போக்குவரத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.