இலண்டன் – கொவிட்-19 தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள விமான நிறுவனங்களில் ஒன்று பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ். விமானப் பயணங்கள் தடைப்பட்டிருப்பதால், செலவினங்களை மேலும் குறைக்கும் வகையில் தனது 30 ஆயிரம் பணியாளர்களுக்கு சம்பளத்தோடு கூடிய விடுமுறையை வழங்கியிருக்கிறது.
பிரிட்டனின் அதிகாரபூர்வ விமான நிறுவனமாகச் செயல்படும் பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ், தனது தொழிலாளர்களின் சங்கங்களுடன் பேச்சு வார்த்தைகள் நடத்திய பின்னர் நடப்பு சம்பளத்தில் 80 விழுக்காட்டை வழங்க ஒப்புக் கொண்டுள்ளது
இந்த சம்பளத்தில் முதல் 2,500 பவுண்ட் தொகையை அரசாங்கம் வழங்கும். எஞ்சிய தொகையை பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் நிறுவனம் வழங்கும்.
தற்காலிக வேலை நீக்க முடிவுகள் எதையும் பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் எடுக்காது. இந்த புதிய நடைமுறைகள் எதிர்வரும் மே மாதம் வரை தொடரும்.
இந்த முடிவின் மூலம் பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் பணியாளர்கள் தங்களின் வேலைகளைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
இலண்டனின் கேட்விக் விமான நிலையத்திலிருந்து பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் திங்கட்கிழமை (மார்ச் 30) முதல் சேவைகளை மேற்கொள்ளாது எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
திங்கட்கிழமையோடு பிரிட்டனின் மலிவுவிலை விமான நிறுவனமான ஈசி ஜெட் (EasyJet) தனது சேவைகளை நிறுத்திக் கொண்டதோடு, தனது 4,000 பணியாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை வழங்கியிருக்கிறது. இதே போல மற்ற பிரிட்டிஷ் விமான நிறுவனங்களும் முடிவெடுத்திருக்கின்றன.
மற்றொரு பெரிய மலிவுவிலை விமான நிறுவனமான வெர்ஜின் ஏர்வேய்ஸ் தனது அடுத்த கட்ட முடிவை இதுவரையில் அறிவிக்கவில்லை. எனினும் அதன் கோடீஸ்வர முதலாளியான ரிச்சர்ட் பிரான்சன், வெர்ஜின் குழுமப் பணியாளர்களின் வேலைவாய்ப்புகளைத் தற்காக்கத் தனது சொந்தப் பணமாக 250 மில்லியன் அமெரிக்க டாலர்களை மறுமுதலீடு செய்யவிருக்கிறார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நிதி உதவிக்காக ரிச்சர்ட் பிரான்சன் விண்ணப்பித்திருக்கிறார் என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய நாடுகள் விமான நிறுவனங்களுக்கு நிதி உதவித் திட்டங்கள் எதனையும் அறிவிக்கவில்லை.
ஆனால் அமெரிக்காவின் 2.2 டிரில்லியன் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் அமெரிக்க விமான நிறுவனங்களுக்கு நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன.
2020-ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் உள்ள விமான நிறுவனங்களின் வருமானம் 262 பில்லியன் டாலர்கள் குறையும் என கணிக்கப்படுகிறது.