இலண்டன் : பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிந்த பின்னர் தமிழ் நாடு முதல்வர் தன் முகநூலில் இட்ட பதிவு அனைத்துலக அளவில் தமிழர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது. பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஒலிக்கப் போகும் முதல் தமிழ்க் குரலான உமா குமரனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததுதான் அந்தப் பதிவு.
இந்த முறை பிரிட்டன் தேர்தலில் பல்வேறு கட்சிகளின் சார்பில் 8 தமிழர்கள் களம் கண்டனர். அதன்படி உமாகுமரன், மயூரன் செந்தில்நாதன், கவின் ஹரன், கமலா குகன், நரணி ருத்ரா ராஜன், கிருஷ்ணி, டெவின் பால் மற்றும் ஜாஹீர் உசேன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் ஸ்ட்ராட்ஃபோர்ட் – பவ் தொகுதியில் தொழிலாளர் கட்சி சார்பாக போட்டியிட்ட உமா குமரன் மட்டும் வெற்றி வாகை சூடினார். இதன் மூலம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நுழையும் முதல் தமிழ் பெண் என்ற பெருமையை உமா குமரன் பெற்றுள்ளார்.
“பிரிட்டனின் ஸ்ட்ராட்ஃபோர்ட் – போ நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராகத் தேர்வாகியுள்ள முதல் தமிழ் பெண்மணியுமாகிய உமா குமரனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். தமிழர்களுக்குத் தாங்கள் மிகப்பெரும் பெருமையைத் தேடித் தந்துள்ளீர்கள்” என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
தன்னை வாழ்த்தியதற்காக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார் உமா குமரன். ‘‘உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் அன்பையும் ஆதரவையும் வெளிப்படுத்தியமைக்கு மிக்க நன்றி; ஸ்ட்ராட்ஃபோர்ட் – போ மக்கள் என் மீதும், எங்கள் சமூகத்தின் மீதும் வைத்துள்ள நம்பிக்கையை திருப்பி செலுத்தும் பொறுப்பை நான் ஆழமாக உணர்கிறேன்’’ என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் உமா.
இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் உமா. இலங்கைத் தமிழ் அகதிகளின் மகளாக கிழக்கு இலண்டன் பகுதியில் பிறந்து வளர்ந்தவர். கிழக்கு இலண்டன் பகுதி இந்திய, இலங்கை, ஆசிய வம்சாவளியினர் அதிக அளவில் வசிக்கும் வட்டாரம். உலகப் பருவ நிலை மாற்றத்திற்காகப் போராடும் இயக்கங்களுக்குத் தலைமை தாங்குபவர் உமா குமரன்.
நாடாளுமன்றத்திற்குப் போட்டியிடும் முன்னரே அரசியல் அனுபவம் பெற்றவர் உமா. எதிர்க்கட்சித் தலைவரின் நாடாளுமன்ற விவகாரங்களில் துணை இயக்குநராகப் பணியாற்றினார். பிரதமருக்கு எதிரான கேள்விகளைத் தொடுக்கும் வியூகத்தைப் பின்னணியில் இருந்து உமா குமரன் வகுத்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலண்டன் நகர மன்றத் தலைவர் (மேயர்) சாதிக் கான்னின் ஆலோசகராகவும் செயல்பட்டார்.
கடந்த 16 ஆண்டுகளாக உயர் மட்ட ஆலோசனை, வியூக மையங்களில் செயல்பட்டவர் உமா. கடந்த முறை தொழிலாளர் கட்சி ஆட்சியில் இருந்தபோதும் அந்தக் கட்சிக்காகப் பணியாற்றியவர்.
மருத்துவமனை வானொலி அலைவரிசைகளுக்கான அறிவிப்பாளராகவும் மருத்துவமனைகளில் சேவையாளராகவும் அவர் பணியாற்றியிருக்கிறார்.
ஸ்ட்ராட்போர்ட் மற்றும் போ (Stratford and Bow) தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. இதன் முதன் நாடாளுமன்ற உறுப்பினரக உமா வெற்றி பெற்றிருக்கிறார்.
வெற்றி பெற்றதும் வெளியிட்ட முதல் சமூக ஊடகப் பதிவில் “என் மீதும் தொழிலாளர் கட்சியின் மீதும் நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி. எப்போதுமே உங்களின் குரலாகவும், பிரதிநிதியாகவும் செயல்படுவேன். உங்களைக் கைவிட்டு விட மாட்டேன்” என உமா குறிப்பிட்டார்.