Home உலகம் பிரிட்டன்: புதிய பிரதமர் கீர் ஸ்டாமர்! அமைச்சரவை நியமனங்கள் பரிசீலனை!

பிரிட்டன்: புதிய பிரதமர் கீர் ஸ்டாமர்! அமைச்சரவை நியமனங்கள் பரிசீலனை!

468
0
SHARE
Ad
புதிய பிரதமர் கீர் ஸ்டார்மர் மன்னர் சார்ல்சை சந்தித்தபோது…

இலண்டன் : பிரிட்டன் பொதுத் தேர்தலில் வாக்களிப்பு முடிவடைந்த நிலையில் கடந்த 14 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்த தொழிலாளர் கட்சி மாபெரும் வெற்றி பெற்றது.

கீர் ஸ்டாமரின் வெற்றியைத் தொடர்ந்து நடப்பு பிரதமர் ரிஷி சுனாக் தனது பிரதமர் பதவியிலிருந்து விலகினார். கீர் ஸ்டாமர் மன்னர் சார்ல்சைச் சந்தித்து ஆட்சி அமைக்கும் உரிமை கோரினார்.

பிரிட்டிஷ் தொலைக்காட்சிகள் வெளியிட்ட வாக்களிப்புக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகளின்படி மொத்தமுள்ள 650 தொகுதிகளில், 410 தொகுதிகளை தொழிலாளர் கட்சி கைப்பற்றும் என கணிக்கப்பட்ட நிலையில் இறுதி நிலவரப்படி 412 தொகுதிகளை தொழிலாளர் கட்சி கைப்பற்றியது. தொழிலாளர் கட்சி (லேபர் பார்ட்டி) 2019-இல் நடைபெற்ற கடந்த பொதுத் தேர்தலில் 1935-க்குப் பிறகான மோசமான தோல்வியைச் சந்தித்தது. அந்தக் கட்சியின் தலைவர் கீர் ஸ்டார்மரின் தலைமையின் கீழ் மீண்டும் அந்தக் கட்சி புத்துருவாக்கம் கண்டுள்ளது. ஆட்சி அமைக்க 326 தொகுதிகள் பெரும்பான்மை மட்டுமே தேவை என்ற நிலையில் தொழிலாளர் கட்சி 412 தொகுதிகளைக் கைப்பற்றியது.

#TamilSchoolmychoice

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் 371 தொகுதிகளைக் கொண்டிருந்த கன்சர்வேடிவ் கட்சி 250 தொகுதிகளை இழந்து 121 தொகுதிகளை மட்டுமே தற்போது கொண்டிருக்கிறது.

லிபரல் டெமோக்ரேட் கட்சி 8 தொகுதிகளில் மட்டுமே கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தது. இந்த முறை வரலாற்றில் முதல் முறையாக கூடுதலாக 63 தொகுதிகளைப் பெற்று மொத்தம் 71 தொகுதிகளை புதிய நாடாளுமன்றத்தில் கொண்டிருக்கும்.

அரசியல் மாற்றங்களுக்குப் போராடும் ரிபோர்ம் கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்று முதன் முறையாக நாடாளுமன்றத்தில் கால்பதிக்கிறது. அக்கட்சி 2019 பொதுத் தேர்தலில் எந்தத் தொகுதியையும் வெல்லவில்லை. ரிபோர்ம் கட்சித் தலைவர் நிகல் ஃபாராஜ் தனது தொகுதியில் வெற்றி பெற்றார். 4 மில்லியன் வாக்குகளுக்கும் கூடுதலாகப் பெற்று நாட்டின் 3-வது பெரிய கட்சியாக ரிபோர்ம் கட்சி உருவெடுத்துள்ளது.

ஸ்காட்லாந்து நேஷனல் பார்ட்டி என்னும் கட்சி 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்த பொதுத் தேர்தலில் 47 தொகுதிகளைக் கொண்டிருந்த இந்தக் கட்சி இந்த முறை 9 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

புதிய அமைச்சரவை நியமனங்கள்

புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கீர் ஸ்டார்மர் துணைப் பிரதமராக
அஞ்சலா ரேய்னர் என்பவரை நியமித்துள்ளார்.

மற்ற அமைச்சரவை நியமனங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.