Home உலகம் பிரிட்டன்: வெற்றியை நோக்கி தொழிலாளர் கட்சி! 410 தொகுதிகள் என கருத்துக் கணிப்பு!

பிரிட்டன்: வெற்றியை நோக்கி தொழிலாளர் கட்சி! 410 தொகுதிகள் என கருத்துக் கணிப்பு!

335
0
SHARE
Ad
கீர் ஸ்டாமர்

இலண்டன் : பிரிட்டன் பொதுத் தேர்தலில் வாக்களிப்பு நடைபெற்று முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி மாபெரும் வெற்றியை நோக்கி முன்னேறுவதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரிட்டிஷ் தொலைக்காட்சிகள் வாக்களிப்புக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டன. அதன்படி மொத்தமுள்ள 650 தொகுதிகளில், 410 தொகுதிகளை தொழிலாளர் கட்சி கைப்பற்றும் என கணிக்கப்படுகிறது. தற்போதைய ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சி 170 தொகுதிகளை மட்டுமே பெறும் எனவும் அந்தக் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

பிரிட்டனின் மற்ற முக்கிய அரசியல் கட்சிகளான ரிபோர்ம் பார்ட்டி, லிபரல் கட்சி ஆகியவையும் கணிசமானத் தொகுதிகளைக் கைப்பற்றும் எனவும் வாக்களிப்புக்குப் பிந்திய கருத்துக் கணிப்பு குறிப்பிடுகிறது.

#TamilSchoolmychoice

தொழிலாளர் கட்சியின் வெற்றியைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் கீர் ஸ்டாமர் பிரிட்டனின் புதிய பிரதமராவார்.

நேற்று வியாழக்கிழமை (ஜூலை 4) நடைபெற்ற இந்தப் பொதுத் தேர்தல்  கடந்த 14 ஆண்டுகால கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியின் மீதான ஒரு பொது வாக்கெடுப்பாக பார்க்கப்படுகிறது.

பிரதமர் ரிஷி சுனாக்கின் தவணைக்காலம் நிறைவடைவதற்கு முன்னரே இந்த திடீர் தேர்தல் நடத்தப்பட்டது. பொதுவாக ஒரு மாற்றம் தேவை என்னும் அடிப்படையில் வாக்காளர்கள் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியைப் புறக்கணித்துள்ளனர் எனப் பார்க்கப்படுகிறது.

முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி (லேபர் பார்ட்டி) 2019-இல் நடைபெற்ற கடந்த பொதுத் தேர்தலில் 1935-க்குப் பிறகான மோசமான தோல்வியைச் சந்தித்தது. அந்தக் கட்சியின் தலைவர் கீர் ஸ்டார்மரின் தலைமையின் கீழ் தற்போது மீண்டும் அந்தக் கட்சி புத்துருவாக்கம் கொண்டுள்ளது.

ரிஷி சுனாக்

ஆறு வார கால பிரச்சாரங்களில் பெரும்பகுதி பொருளாதாரம், வாழ்க்கைச் செலவு, பிரிட்டனின் பொதுச் சேவைகளின் நிலை, வரி மற்றும் குடியேற்றம் ஆகிய அம்சங்களே மையம் கொண்டிருந்தன.

2020ஆம் ஆண்டில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகி விட்டதால் அந்த விவகாரம் இந்த முறை பிரச்சாரங்களில் அதிக அளவில் இடம் பெறவில்லை. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட ஒரு பொதுவாக்கெடுப்பு மூலம் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் வரலாற்று பூர்வ முடிவை எடுத்தனர்.

2019-இல் நடந்த பொதுத் தேர்தலில் போரிஸ் ஜான்சன் பெரும் வெற்றி பெற்றதிலிருந்து இதுவரையில் பிரிட்டனுக்கு மூன்று கன்சர்வேடிவ் பிரதமர்கள் தொடர்ந்து வாய்த்தனர்.

ஜான்சனுக்குப் பிறகு, கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள் 2022ஆம் ஆண்டில் அவருக்குப் பதிலாக லிஸ் ட்ரஸ் என்ற பெண்மணியைத் தேர்ந்தெடுத்தனர். அவர் பிரிட்டிஷ் வரலாற்றில் மிகக் குறுகிய காலம் பணியாற்றிய பிரதமரானார். பின்னர் கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருக்குப் பதிலாக ரிஷி சுனாக்கை தேர்ந்தெடுத்தனர். அந்தத் தேர்வின் மூலம் பிரிட்டனின் முதல் பிரிட்டிஷ் அல்லாத பிரதமராக சுனாக் வரலாறு படைத்தார்.

தேர்தலில் வாக்களிக்க சுமார் 46.5 மில்லியன் பிரிட்டிஷ் குடிமக்கள் தகுதி பெற்றிருந்தனர். இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வட அயர்லாந்து நாடுகளில் உள்ள 650 தனி தொகுதிகளில் அவர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர். ஒரு கட்சி பெரும்பான்மை அரசாங்கத்தை தனித்து அமைக்க 326 இடங்கள் தேவைப்படுகின்றன.