புதுடில்லி : உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் என்னும் இடத்தில் போலே சாமியார் நடத்தி வந்த ஆசிரமத்தில் நிகழ்ந்த மனித நெருக்குதல்களைத் தொடர்ந்து பலியானவர்களின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது. இதன் தொடர்பில் இதுவரையில் இந்த சம்பவத்திற்காக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலே பாபா என அழைக்கப்படும் ஆன்மீகத் தலைவர் உரை நிகழ்த்திய பின்னர் அவரின் பாத மண்ணை எடுப்பதற்காக மக்கள் முண்டியடித்ததில் 127 பேர் மரணமடைந்தனர். பலர் காயமடைந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் போலோ பாபா சாமியாரின் பிரசங்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 80,000 பேர்தான் பங்கேற்க முடியும். ஆனால் சுமார் 2.5 லட்சம் பேரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பங்கேற்க அனுமதித்துள்ளனர்.
இந்த பிரசங்கம் முடிவடைந்ததும் சாமியாரின் காலடி மண்ணை எடுப்பதற்காக அந்தக் கூட்டத்தினர் முயற்சி செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக உத்தரப் பிரதேசம் (உபி) காவல் துறையினர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் போலோ பாபா சாமியார் பெயர் இடம் பெறவில்லை. இதனால் ஊடகங்களில் பலத்த கண்டனங்கள் எழுந்தன.
இந்த சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியான பிரகாஷ் மதுகர் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் உ.பி. அரசு அறிவித்துள்ளது.
போலோ பாபா சாமியார் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு ஆதாரங்களின் அடிப்படையில் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உ.பி. காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
போலே பாபா சாமியார் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தலைமறைவாகியுள்ளார். இவர் மீது ஏற்கனவே 5 பாலியல் பலாத்கார வழக்குகள் பல நகரங்களில் பதிவாகி இருக்கின்றன. ஆனால் போலே பாபா சாமியார் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அவர் இளம் வயதில் காவல் துறையில் பணிபுரிந்ததாகவும், அவர்மீது குற்றப் பதிவுகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.