Home உலகம் ரிஷி சுனாக் அடுத்த பிரிட்டன் பிரதமர்!

ரிஷி சுனாக் அடுத்த பிரிட்டன் பிரதமர்!

825
0
SHARE
Ad

இலண்டன் : பிரிட்டிஷ் அரசியலில் எதிர்பார்த்த திருப்பமாக – ரிஷி சுனாக் அடுத்த பிரதமராக பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறார். ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக ரிஷி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை என்பதால் அவரே கட்சியின் தலைவராகியிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து இயல்பாகவே பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனாக் பதவியேற்கவிருக்கிறார். புதிய மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சார்ஸ் முன்னிலையில் பதவியேற்கும் முதல் பிரதமர் என்ற பெருமையையும் ரிஷி பெறுகிறார்.

பதவி விலகிய லிஸ் டிரஸ்

போரிஸ் ஜோன்சனுக்குப் பிறகு பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்றார். பதவியேற்ற 45 நாட்களுக்குள்ளாக அவர் பதவி விலகினார்.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் அரசியலில் மீண்டும் திருப்பம் ஏற்பட்டது. லிஸ் டிரஸ்சிடம் கன்சர்வேடிவ் கட்சிக்கான தலைமைத்துவத் தேர்தலில் தோல்வியடைந்த இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனாக் அடுத்த பிரிட்டிஷ் பிரதமராகலாம் என்ற எதிர்பார்ப்பு மீண்டும் ஏற்பட்டது.

பிரிட்டனின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் லிஸ் டிரஸ்ட் நடப்பு நிதி அமைச்சர் குவாசி குவார்தெங்கை அந்தப் பதவியிலிருந்து நீக்கினார். அவருக்குப் பதிலாக புதிய நிதியமைச்சராக ஜெரமி ஹண்ட் என்பவரை நியமித்தார். ஜெரமி ஹண்ட், ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவிக்கு லிஸ் டிரஸ்சுடன் போட்டியிட்டவர்களில் ஒருவராவார்.

பொருளாதார மாற்றங்களை மேற்கொள்ள ஏதுவாக இந்த மாற்றத்தை லிஸ் டிரஸ் செய்தார். எனினும் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்டம் கடுமையானக் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் சந்தித்ததைத் தொடர்ந்து லிஸ் டிரஸ் பதவி விலகினார்.

ஆளும் கன்சர்வேடிவ் கட்சி புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் போட்டியில் ரிஷி சுனாக்கை எதிர்த்துப் போட்டியிடப் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த மற்ற தலைவர்கள் யாரும் போட்டியிட முன்வராததால் புதிய தலைவராக ரிஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிரிட்டனின் வெள்ளையர் அல்லாத முதல் ஆசியர் என்ற பெருமையையும் – 1812 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிட்டிஷ் பிரதமர்களில் மிகவும் இளமையானவர் என்ற பெருமையையும் – ரிஷி பெற்றிருக்கிறார்.