Home இந்தியா கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா இருநாடுகளின் 5,000 பக்தர்கள் பங்கேற்பு

கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா இருநாடுகளின் 5,000 பக்தர்கள் பங்கேற்பு

621
0
SHARE
Ad

kacci-theevuராமநாதபுரம், பிப்.25- கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழாவில் இந்திய, இலங்கை மக்கள் ஆண்டுதோறும் பங்கேற்று உறவுகளை பகிர்ந்து கொள்வர்.

இலங்கையில் 1983ல் உள்நாட்டு போர் தீவிரமடைந்ததும் கச்சத்தீவு திருவிழா நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் 2002ல் நிலைமை கட்டுக்குள் வந்ததும் கச்சத்தீவில் மீண்டும் திருவிழா தொடங்கியது.

இருந்தபோதும் இந்திய மக்கள் அனுமதிக்கப் படவில்லை. இந்நிலையில் இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு உள்நாட்டு போர் முடிவுக்கு வந்ததும், 27 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2010ம் ஆண்டு தமிழக மக்கள் கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல இலங்கை அரசு அனுமதி அளித்தது.

#TamilSchoolmychoice

அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் தமிழக மக்கள் கச்சத்தீவு சென்று வருகின்றனர். இந்தாண்டு கச்சத்தீவு திருவிழாவிற்காக நேற்று முன்தினம் ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து 100 படகுகளில் 2 ஆயிரத்து 814 பேர் சென்றனர்.

நடுக்கடலில் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை கப்பல்கள், ரோந்துப் படகுகளில் நிறுத்தி வைக்கப்பட்டு, கண்காணிப்பில் ஈடுபட்டன. கச்சத்தீவு அருகில் நடுக்கடலில் இலங்கை கடற்படையின் பி621 கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டு, கடற்படை வீரர்கள் படகில் எத்தனை பேர் வருகிறார்கள் என்ற கேள்வியுடன் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.கச்சத்தீவு கடற்கரையில் இந்தாண்டு பாதுகாப்பான தற்காலிக ஜெட்டி அமைத்திருந்தனர்.

கடற்கரையில் இலங்கை உங்களை வரவேற்கிறது என்ற வாசகத்துடன் பேனர் கட்டியிருந்தனர். அங்கு சிறிய சோதனைக்கு பின் தீவிற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதன்பின் மக்கள் சுதந்திரமாக கச்சத் தீவின் பல்வேறு இடங்களில் கூடாரம் அடித்தும், செடி கொடிகளுக்கு இடை யிலும், கட்டாந்தரைகளி லும் அமர்ந்தனர்.

இலங்கையிலிருந்து 208 படகுகளில் 2 ,381 இலங்கை மக்கள் கச்சத்தீவிற்கு வந்தனர். புனித அந்தோணி யார் கோயிலில் நேற்று மா லை 5.35 மணிக்கு இலங்கை நெடுந்தீவு பங்குத்தந்தை அமல்ராஜ் தலைமையிலும், சிவகங்கை மறைமாவட்ட முதன்மை குரு அமல்ராஜ் முன்னிலையிலும் கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்கியது.

இதைத் தொடர்ந்து பிரார்த்தனை 14 இடங்களில் சிலுவை பாதை நிகழ்ச்சி நடந்தது. திருப்பலிக்கு பின், தேர்பவனி நடந்தது.இந்தாண்டு முதன்முறையாக இலங்கை கடற்படையினர் இரவு 9 மணிக்கு மேல் ஏராளமான வானவேடிக்கைகள் நடத்தி மக்களை மகிழச் செய்தனர். அதன் பின்னர் இருநாட்டு மக்களும் திறந்த வெளிகளிலும், தற்காலிக கூடாரங்கள் மற்றும் செடி, கொடிகளுக்கு இடையே உறங்கத் தொடங்கினர்.

நேற்று காலை 6.30 மணிக்கு யாழ்ப்பாண மறைமாவட்ட பிசப் தாமஸ் சவுந்தரநாயகம் தலைமையில் திருவிழா திருப்பலி தொடங்கியது. நெடுந்தீவு பங்குந்தந்தை அமல்ராஜ், ராமேஸ்வரம் பங்குத்தந்தை சகாயராஜ், சிவகங்கை மறைமாவட்ட முதன்மை குரு அமல்ராஜ் உட்பட தமிழக மற்றும் இலங்கை பங்குத்தந்தைகள் முன்னிலை வகித்தனர்.

இலங்கை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண எம்.பி., முருகேசு சந்திரகுமார், யாழ்பாண மேயர் யோகேஸ்வரி பர்குணராஜ், இந்திய தூதர் அசோக் காந்தா, இந்திய துணைத் தூதர்கள் மகாலிங்கம் (கொழும்பு), எஸ்.டி.மூர்த்தி (யாழ்ப்பாணம்), இலங்கை வடக்கு மாகாண கடற்படை கமாண்டர் உத்தவர்த்தா, வடக்கு மாகாண ராணுவத் தளபதி மகிந்தா ஹத்ரு சிங்கே, யாழ்பாண டிஐஜி கருணாரத்னே, யாழ்பாண மாவட்ட நீதிபதி அமலவளவன் உட்பட அதிகாரிகள், இருநாட்டைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் கடற்கரையில் அமைக்கப்பட்ட அந்தோணியார் சிலையை யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் திறந்து வைத்தார். தொடர்ந்து கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெற் றது. இரு நாட்டு மக்களும் ஒருவருக்கு ஒருவர் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டனர்.