கோலாலம்பூர், அக்டோபர் 30 – ஒரு பெண் மலேசியாவின் பிரதமராவதை யாராலும் தடுக்க இயலாது என முன்னாள் பிரதமர் டாக்டர் துன் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
கூட்டரசு அரசியல் சாசனம் ஒரு பெண் பிரதமராகப் பதவி வகிப்பதற்கு எந்தவித தடையும் விதிக்கவில்லை என்றார் அவர்.
எனினும், ஒரு ஜனநாயக நாட்டில் பெரும்பான்மை ஆதரவு யாருக்கு உள்ளது என்பதும் முக்கியம் என்று மகாதீர் கூறினார்.
கோலாலம்பூரில் நடைபெற்ற பெண்களுக்கான கருத்தரங்கம் ஒன்றின் நிறைவு விழாவில் கலந்து கொண்ட அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.
“பெரும்பான்மையான ஆதரவுடன் ஒரு பெண் வெற்றி பெற்றால், ஒரு கட்சி அவரை தலைவியாகத் தேர்வு செய்யும். கட்சித் தலைவியாகப் பொறுப்பேற்ற பின்னர் அவரால் நாட்டின் பிரதமராக முடியும்,” என்று அத்ததைய கேள்வி ஒன்றுக்கு மகாதீர் பதிலளித்தார்.
வருங்காலத்தில் நிறைய பெண்கள் தலைமைத்துவப் பதவிகளுக்கு வருவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.